தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 19: ஆனந்தமே முருகன்!

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் 19: ஆனந்தமே முருகன்!
Updated on
2 min read

அற்றைக் கிரைதேடி அந்தத்.... திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப்.... பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத்.... தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப்.... பெருமாளே

- திருப்புகழ்

நமது துன்பங்கள் அனைத்துக்கும் ஆசைகள்தாம் காரணம் என்றாலும் ஆசையைவிட முடிவதில்லை. அன்றாட உணவுத் தேவையிலிருந்து பொருள் மீது பற்று வைத்து அதைத் தேடி அலைவதிலேயே வாழ்நாள் கழிந்துவிடுகிறது. பற்று இல்லாத வாழ்வை அருள வேண்டும் என்று காஞ்சி குமரக் கோட்டத்து முருகனை வேண்டுகிறார் அருணகிரியார்.

குமரக் கோட்டத்து குகன்: குமரன் தனக்கு பூஜை செய்துவந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு ‘திகடச் சக்கரம்’ என்று அடியெடுத்துக் கொடுத்து கந்தபுராணம் எழுத வைத்த தலம் இது. குமரக் கோட்டத்து குகன் மிகச் சிறப்பு வாய்ந்தவனாகக் கருதப்படுகிறான். இங்குள்ள கல் மண்ட பத்தில் கந்த புராணம் அரங்கேறியது. பரம்பொருளை, ‘சத்-சித்- ஆனந்தம்’ என்பார்கள். இதில் ‘சத்’ ஈசனையும், ‘சித்’ அம்பாளையும் குறிக்கிறது. இதில் பிறக்கும் ஆனந்தமே முருகன்.

காஞ்சியில் ஈசனுக்கும் அம்பாளுக் கும் நடுவில் ஆனந்தமாகக் குமரக் கோட்டத்துக் குமரனாகக் காட்சி அளிக் கிறான் முருகன். இங்கு சுப்ரமணியர் என்ற பெயரில் தவக் கோலத்தில் காட்சி அளிக்கிறான் கந்தன். முருகன் தெற்கு நோக்கி இருக்கிறான். இங்கு நாற்பத்தி ஐந்து திருப்புகழ் பாடல்களைக் பாடியிருக்கிறார் அருணகிரியார்.

திருப்புகழ் அமுதம்: ஈசனை அடைய அம்பிகை காஞ்சி வந்து தவம் செய்ததையும், கம்பா நதியில் பெருகிய வெள்ளம் கண்டு பயத்துடன் தழுவிக்கொண்ட அன்னையின் கைகளில் லிங்கம் குழைந்து நின்றதையும் ஒரு பாடலில் கூறுகிறார் அருணகிரியார்.

இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த .... உமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ .... லுடையோனே

அப்பேற்பட்ட ஈசனுக்கே பிரணவத்தின் பொருள் உரைக்கிறான் கந்தன். குருவாக நின்று உபதேசித்த குகனே நம் கர்ம வினைகளைத் தீர்க்கும் கதியாகவும் இருக்கிறான். ‘கர்ம வினையால் பிறப்பெடுத்து, மீள வழி தெரியாமல், துர்குணம் மேலாக, அலைந்து திரியும் எனக்குச் சத்திய வடிவினை, நிறைவான உண்மை வடிவத்தைக் காட்டி அருள்வாயே’ என்று கூறும் அருணகிரியார், இதில் பாண்டவர்களுக்குக் குருட்ஷேத்திரப் போரில் துணைநின்ற திருமாலின் மருகோனே என்றும் கந்தவேளைப் புகழ்கிறார்.

இந்த உடம்பு கர்மவினையின் காரணமாகவே விளைகின்றது. அந்த வினை அழிந்தால் மீண்டும் பிறப்பு நேராது. வினைகளை அழிப்பவனே காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள கந்த பெருமாள்.

‘கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
கச்சியில மர்ந்த கதிர்வேலா’

- எனப் பிறவித் துயரை அறுக்கவே அனைவரும் இறைவனிடம் கையேந்த வேண்டும் என்கிறார். நம் இதயம் வட்ட வடிவமானது என்கிறார் அருணகிரியார். அதில் வைத்துப் பூஜிக்கத் தக்கவன் கார்த்திகேயன். துன்பமுறும் சமயம் வந்து அருள்வோன்.

நால்வகை கதிகள் என்கிறார் அருணகிரிநாதர். ‘தேவ கதி, மனித கதி, நர கதி, விலங்கு கதி என்று பிறப்பெடுத்து, தடுமாறிச் சுற்றிச் சுழன்று துயர்படும் அடியேனை சற்றாகிலும் பற்றி ஆட்கொள்ளக் கூடாதா? என்றுதான் முருகனிடம் கெஞ்சுகிறார்.

முட்டுப் பட்டுக் கதிதோறும்
முற்றச் சுற்றிப் பலநாளும்
தட்டுப் பட்டுச் கழல்வேனைச்
சற்றுப் பற்றக் கருதாதோ
கட்டத் தற்றத் தருள்வோனே
கச்சிச் சொக்கப்பெருமாளே

- எனப் பாடல்கள் தோறும் தான் மங்கையர் கண் சுழலில் சிக்கி விடாமல், காத்தருள வேண்டும் என்பவர், ‘உன் திருவடி பற்றினால் எந்தக் கேடும் வராது’ என்று உறுதியாகச் சொல்கிறார்.

வேண்டியதைத் தரும் வேலவன்: முருகா என்றால் மூவினையும் தீரும். முத்தமிழும் தருவான் என்பது சத்தியமான உண்மை. பாதுகாப்பாகக் காத்து, நமக்கு வேண்டிய அனைத் தையும் கேட்காமலேயே தருவான் என்பது பிரபஞ்ச உண்மை. இதையே ‘கைவாய், கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனமே ஒழிவாய், ஒழிவாய்’ என்கிறார் அருணகிரிநாதர். ஐம்பொறிகள்வழிச் செல்லும் அவா வினையை ஒழித்து நற்கதி அருள்வான் நம் குமரன்.

(புகழ் ஓங்கும்)

ஜி.ஏ.பிரபா | gaprabha1963@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in