

மத்திய பிரதேசத்தின் சல்கான்பூர் பகுதியில் உள்ள ஒரு குன்றின் மீது விந்தியவாசினி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு துர்க்கை கோயில். இந்தக் கோயிலைப் பற்றி இரண்டு கதைகள் உண்டு. அதில் ஒரு கதை இது:
சதியின் இடது மார்பகம் இங்கு விழுந்தது. இந்தப் பக்கத்தில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், மந்தை ஆடுகளைத் தினமும் குன்றின்மீது மேயவிடுவான். ஒரு நாள் அவற்றில் பாதியைக் காணவில்லை. திகைத்த சிறுவன், வீட்டுக்கு வந்து நடந்ததைக் கூறினான்.
அன்றிரவு, ஊர்ப் பெரியவரது தூக்கத்தில் துர்க்கை தோன்றினாள். “என்னுடைய ‘பின்டி’ (கல்) ஒன்று குறிப்பிட்ட இடத்தில் உள்ளது. அதை நாளை ஆடுகளைக் கண்டுபிடிக்கும்போது உணர்வாய். அங்கேயே எனக்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும். இப்படிச் செய்தால் இந்த ஊரை நான் காவல் தெய்வமாக இருந்து காப்பேன்” எனக் கூறி மறைந்தாள்.
அடுத்த நாள் ஊர் மக்கள் சென்று பார்த்தபோது, ஓர் இடத்தில் ஆடுகள் சுற்றி அமர்ந்திருந்தன. நடுவில் ஒரு கல் இருந்தது. அது ஒளி வீசியது. ஊர்ப் பெரியவரின் கனவில் துர்க்கை சொன்னதைப் புரிந்துகொண்டு, அங்கேயே அதை வைத்து முறையாகப் பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர்.
இன்னொரு கதையின்படி துர்க்கை மகிஷாசுரனை ஆக்ரோஷமாக வதம் செய்துவிட்டு, விந்திய மலையில் சிறிது காலம் ஓய்வு எடுத்தாள். அவள் ஓய்வெடுத்துத் திரும்பும்போது, தனக்குப் பதில் ஒரு பின்டியை வைத்துச் சென்றாள். அதுவே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் துர்க்கைக்கு இங்கு பெயர் விந்தியவாசினி.
இங்கு பத்ரானந்த சுவாமி என்பவர் பல காலம் தவம் செய்தார். அப்போது அவருக்கு விந்தியவாசினி காட்சி கொடுத்தாள். அதனால், ஏற்கெனவே இருந்த சிறிய கோயிலை அவர் புதுப்பித்தார். இன்றைய கோயில், குன்றின் மீது உள்ளது. இது 400 ஆண்டுகள் பழமையானது. அவ்வப்போது புது வண்ணங்கள் பூசப்படுகின்றன. குன்று 800 அடி உயரம் கொண்டது. படிகள் வழியாக ஏறலாம். மொத்தம் 1,451 படிகள். அடிவாரத்திலிருந்து மலையின் உச்சிக்குச் சாலை வசதியும் உள்ளது. இரண்டும் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரோப் கார்! பத்து நிமிடங்களில் உச்சியைத் தொடலாம்.
இந்தக் கோயிலுக்கு மிக எளிமையான நுழைவுவாயில். அதைத் தாண்டி உள்ளே சென்றால், பக்கவாட்டில் நன்கு விரிந்த முன்னறை. பிறகு நடு மண்டபம், அடுத்து கர்ப்பகிரகம். கல்யாண மண்டபங்களில் மேடை உயர்த்தி அமைக்கப்பட்டிருக்குமே, அதுபோன்ற அமைப்பு. கர்ப்பகிரகத்தின் நடுவில் பின்டியை நன்கு அலங்கரித்து அழகாக வைத்துள்ளனர். வட நாட்டுக் கோயில்களில் முதன்மைப் பெண் தெய்வத்தின் பெயர் இருந்தாலும் நிச்சயம் சற்று சிறிய வடிவில் காளியும் சரஸ்வதியும் இருப்பர். இங்கும் விந்தியவாசினிக்கு வலப்பக்கம் காளியும் இடப்பக்கம் சரஸ்வதியும் உள்ளனர்.
மங்களநாயகி: கோயிலுக்குள் நான்கு கைகளுடன் கூடிய விந்தியவாசினியின் சுதை சிற்பம் உள்ளது. கர்ப்பகிரகத்தில் விந்தியவாசினி ஆக்ரோஷமாகக் காட்சிதருகிறார். கடும் கோபத்தில் மகிஷாசுரனைக் கொன்று மகிஷாசுரமர்த்தினி எனப் பெயர் பெற்றவளாயிற்றே! அந்த உக்கிரம் கண்களில் நன்கு தெரியும்படி அலங்காரம். ஏகப்பட்ட மாலைகள் அணிந்து மங்கள நாயகியாகக் காட்சிதருகிறார். இந்தக் கோயிலில் மக மாதத்தில் சிறப்புப் பூசைகள் உண்டு. கண்காட்சியும் நடக்கும்.
துர்க்கையின் வாகனம் இங்கு புலி. எங்கிருந்தோ ஒரு புலி வந்து நவராத்திரி சமயத்தில் கர்ஜித்துவிட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது. மக்கள் அதற்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள். அதுவும் கட்டுப்பாடாக இருந்து திரும்பிச் செல்லும். நவராத்திரியின்போது நடக்கும் இந்தச் சம்பவம் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் 400 ஆண்டுகளாக இரண்டு அணையா விளக்குகள் எரிந்துவருகின்றன எனக் கூறுகின்றனர். ஒன்று தேங்காய் எண்ணெய்யில் ஏற்றப்படும் விளக்கு. மற்றொன்று, நெய்யில் ஏற்றப்படும் விளக்கு. இதற்கு காலம் காலமாக மக்கள் எண்ணெய்யும் நெய்யும் காணிக்கையாகக் கொடுத்து வருகின்றனர்.
நவராத்திரி சமயத்தில் மிகப் பெரிய அளவில் கால்நடைச் சந்தை நடக்கிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பிஹாரிலிருந்து மக்கள் வந்து கால்நடைகளை வாங்கியும் விற்றும் செல்கின்றனர். கோயிலுக்குத் தினமும் 1,000 பேருக்கு மேல் வருகின்றனர். திருவிழா நாள்களில் கூட்டம் லட்சத்தை நெருங்கும். கோயிலுக்கு வெளியே சுற்றிப்பார்க்க மிக நன்றாக இருக்கும். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரில் ஒரு விந்தியவாசினி கோயில் உள்ளது. அத்துடன் இதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இது வேறு!
அமைவிடம்: போபால் நகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ரயிலில் போபால் நிறுத்தத்தில் இறங்கலாம். கோயில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.