பக்தர்களுக்காகக் காத்திருக்கும் பாண்டுரங்கன்!

பக்தர்களுக்காகக் காத்திருக்கும் பாண்டுரங்கன்!
Updated on
2 min read

ஆடி மாதம் வளர்பிறையில் 11ஆவது சந்திர நாளன்று, வியாச பூர்ணிமாவுக்கு முன்னர் வரும் ஏகாதசியை ‘ஆஷாட ஏகாதசி' என்பர். பகவான் விஷ்ணு இந்த ஆஷாட ஏகாதசி நாளில் யோக சயனம் மேற்கொள்வதும், கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி அன்று சயனத்திலிருந்து விழிப்பதாகக் கருதுவதும் வைணவர்களின் ஐதிகம்.

இந்த ஆஷாட ஏகாதசி மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 700 வருடத்துக்கும் மேலாக விட்டல பக்தியில் திளைக்கும் பக்தர்கள் இந்நாளில் பல இடங்களிலிருந்து லட்சக்கணக்கில் பண்டரிபுரத்துக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.

பீமா நதிக்கரையில் பகவான் கிருஷ்ணர் ருக்மிணி தேவியுடன் பாண்டுரங்கன் ரகுமாயியாக இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு செங்கல் மேல் நின்றவாறு காட்சி தருகிறார். இந்த நாளுக்கும் விட்டலனுக்கும் என்ன சம்பந்தம்? யார் இந்த பாண்டுரங்கன்? பகவானைத் தேடிச் செல்லும் பக்தர்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், பகவானே பக்தரைத் தேடி வருவதை இங்கு காணலாம்.

புண்டலீகனுக்கு அவனுடைய வயதான தாய், தந்தையைக் கவனித்துக் கொள்வதுதான் அதிமுக்கியமான பணி. அவர்களுக்குச் செய்யும் பணிவிடையே இறைவனுக்குச் செய்யும் பணிவிடையாக புண்டலீகன் நினைத்தான். புண்டலீகனைப் பரிசோதிக்கும் விதமாகப் பகவான் கிருஷ்ணர் புண்டலீகன் வீட்டுக்கு ஒரு முறை வந்து “புண்டலீகா புண்டலீகா” என்று அவனை அழைத்தார்.

நல்ல மழை பெய்துகொண்டிருந்தது, புண்டலீகனோ அசதியாக இருக்கும் அவன் தாய், தந்தையை உறங்க வைத்துக்கொண்டிருந்தான். “யாராக இருந்தாலும் இந்த செங்கல் மேல் நின்று காத்திருங்கள். என் தாய், தந்தை உறங்கிய பிறகு வந்து சந்திக்கிறேன்” என்று இரண்டு செங்கல்களை வாசல் பக்கமாக வீசினான். இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தபடி செங்கல் மீது நின்றபடி கிருஷ்ணர் பாண்டுரங்கனாக மாறினார்.

தாய் தந்தையை உறங்க வைத்துவிட்டுத் தன்னை அழைத்தவர்களைக் காண வீட்டுக்கு வெளியே வந்தான் புண்டலீகன். அங்கே தான் எறிந்த செங்கல்லின் மீது நின்றுகொண்டிருந்த பாண்டுரங்கனைக் கண்டு பகவானையே செங்கல் மேல் நிற்கவைத்து இவ்வளவு நேரம் காக்க வைத்துவிட்டோமே என்று உணர்வுவயப்பட்டு புண்டலீகன், ரங்கன் காலில் விழுந்தான். “பெற்றோருக்குப் பணிவிடை செய்யும் உன்னைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். காத்திருந்ததில் சிரமம் ஏதும் இல்லை. உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்” என்றார் பாண்டுரங்கன்.

“எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் இதேபோல் காட்சி அளிக்கும் வரத்தை அளிக்க வேண்டும் பாண்டுரங்கா” என்றான் புண்டலீகன். அந்த வரத்தினாலேயே அதே இடத்தில் செங்கல் மேல் நின்றுகொண்டு இடுப்பில் கைவைத்தபடி பீமா நதிக்கரையில் பாண்டுரங்கன் அவரின் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

நம் அனைவராலும் தொட்டு வணங்கக்கூடிய இப்பாண்டு ரங்கன் பண்டரிபுரத்தில் தோன்றிய நாள்தான், ஆஷாட ஏகாதசி. பக்தர்கள் யாத்திரையாக வந்து விட்டலனைச் சந்தித்து அவரை நாமாவளிகளால் மகிழ்ச்சியூட்டும் நாளாக இது கருதப்படுகிறது. இந்த வருடம் ஆஷாட ஏகாதசி ஜூன் 29 அன்று கொண்டாடப்படுகிறது. பண்டரிபுரம் வரை செல்ல முடியவில்லை என்றாலும், பாண்டுரங்கனை நினைத்துத் தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்தும் ஆஷாட ஏகாதசியின் பலன்களைப் பெறலாம்.

- ஸ்ருதி பாலசுப்ரமணியன், பயிற்சி இதழாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in