

தேர்ந்துகொண்ட துறையில் பெறும் வெற்றியே வாழ்க்கையின் உண்மையான வெற்றி எனப் பலர் நினைக்கின்றனர். இன்னும் பலர், பணத்தைத் தேவையான அளவுக்குச் சம்பாதித்துவிட்டால் அதுவே வெற்றி எனக் கருதுகிறார்கள். வேறு பலர், அதிகாரமும் செல்வாக்கும் செலுத்தும் பதவியில் இருப்பதும் அதில் நீடிப்பதுமே வெற்றி எனக் கருதுகின்றனர்.
குடும்ப வாழ்க்கையில் பெரும் வெற்றியே உண்மையான வெற்றி என்று புனித விவிலியம் எடுத்துக் காட்டுகிறது. கணவன் - மனைவி உறவு ஒரு தெளிந்த, சிலுசிலுத்து ஓடும் நீரோடைபோல் அமைந்துவிட்டால், அவ்வாறு அமைத்துக்கொண்டால் அதுவே வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை எனக் கூறுகிறது.
அதற்கு அடிப்படையான தேவை அன்பா, பணமா அல்லது வேறு ஏதாவதுமா என்று நீங்கள் கேட்கலாம். இரண்டுமே தேவைதான் என்றாலும், அந்த இரண்டையும் நேர்மையான வழியில் கொடுப்பவராகவும் ஈட்டுபவராகவும் இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கைத் துணை, உங்களை எவ்வளவு நேசிக்க வேண்டும், எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும், எவ்வளவு பரிவுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேபோல் உங்கள் துணையையும் நீங்கள் நடத்துங்கள். மத்தேயு புத்தகம் அதிகாரம் 7 வசனம் 12இல் ‘மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்’ என்று இயேசு கிறிஸ்து குறிப்பிட்டதை எடுத்துக்காட்டுகிறது. ‘கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!’ என்று லூக்கா (11:28) சொல்கிறது.
கணவன் - மனைவி இடையில் சிறு துரும்பைப் போன்ற விஷயங்கள் பெரும் விரிசலாக மாறிவிடுவதற்கு ‘குரலை உயர்த்தி’ப் பேசுவதே காரணமாக அமைந்துவிடுகிறது. குரலை உயர்த்துதல் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு. எப்போதெல்லாம் நீங்கள் குரலை உயர்த்துகிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். உங்கள் துணை உங்களைப் புண்படுத்தும் விதத்தில் குரலை உயர்த்தினாலோ அல்லது உதாசீனம் செய்யும்படி நடந்துகொண்டாலோ அப்போது அவரிடம் அன்பாகப் பேசுங்கள். எபேசியர் புத்தகம் 4:31இல் ‘எல்லா விதமான மனக்கசப்பையும் சினத்தையும் கடும் கோபத்தையும் கூச்சலையும் பழிப்பேச்சையும் மற்ற எல்லா விதமான கெட்ட குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள். ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள். கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
அதேபோல், நீதிமொழிகள் 15:1ஆம் வசனம் சொல்வதுபோல், ‘சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும். ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்’ என்பதை மறந்துவிடாதீர்கள்.
வேலை, தொழில், உடல்நலம், மனநலம் எனப் பிரச்சினை எதுவாக இருந்தாலும், உங்கள் துணையிடம் அதை மனம் திறந்து சொல்லுங்கள். விவிலியம் சொல்கிறது (பிரசங்கி 4:9,10) ‘தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது. ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும்.’ குடும்பம் ஒரு விமானம் என்றால், அது பாதுகாப்பாகப் பறக்க மனமொத்த இரண்டு விமானிகள் தேவை. அவர்கள் கணவனும் மனைவியும்தான்.
- நோவா நதி