

‘தவமேவ ப்ரத்யக்ஷ்ம் ப்ரம்மாஸி'
‘நீயே கண்கண்ட கடவுளாக இருக்கிறாய்!’ என்கிறது வேதம். யாரை அல்லது எதை வேதம் இப்படிச் சொல்கிறது? தெரிந்தால் நாமும் அந்தக் கண்கண்ட கடவுளைக் கண்ணாரக் காணலாமே! நமக்கு மிகவும் தெரிந்தவொன்று நமக்கு இன்றியமையாத வொன்று நம்மோடே இருந்து நம் விழிப்பில் மட்டுமல்லாமல் நம் உறக்கத்திலும் நம்மை நடத்துமொன்று படித்தோ, கேட்டோ, சிந்தித்தோ அறியாமல் நமக்குள்ளே நாமாகவே நாமறிந்த ஒன்று, அதைத்தான் சொல்கிறது வேதம். அட, போதுமய்யா பூடகம், அது என்னவென்று பட்டென்று சொல்!
மூச்சு!
என்ன?
ஆம்! மூச்சு! சுவாசம்! அது இல்லாமல் உயிருண்டா, உலகுண்டா, வாழ்க்கையுண்டா! அந்த மூச்சைக் கண்ணால் பார்த்திருக் கிறீர்களா? அது எப்படியப்பா முடியும் என்று கேட்பீர்கள். ஆனால், மூச்சு உங்களுக்குத் தெரியாததா? கட்டாயம் தெரியும்! கண்ணால் ஒரு பொருளாக அதைக் காண முடிவதில்லை என்பதால் மூச்சு என்று ஒன்று இல்லை என்று சொல்வீர்களா? அதுவொன்றும் பெரிய விஷயமில்லை என்று தள்ளி விடுவீர்களா? முடியாதல்லவா? அதனால்தான், எது இல்லாமல் எதுவுமே முடியாதோ அதை மையப்படுத்தி, அதைக் கண்கண்ட கடவுள் என்று பாடுகிறது வேதம்.
இன்றியமையாததன் மையம்: மூச்சின் அருமையை நாம் எப்போது உணர்கிறோம்? மூச்சுக் காற்றுக்காகத் தவிக்கும் போது! இன்றியமையாதது இல்லாமல் போய்விடுமோ என்கிற சூழ்நிலையில்தான் அதன் முக்கியத்துவம் உணரப்படுகிறது - மனைவி உள்பட! அப்படித்தான் கடவுளும். மூச்சில்லாமல் உயிரில்லை. கடவுளில்லாமல் மூச்சே இல்லை. இதை, மூச்சு நின்றுபோன பிறகா உணர முடியும்? அப்படி உணரவும் கூடுமானாலும், அதனால் யாருக்கென்ன பயன்? ‘சாவிலே பிறந்த ஞானம் வாழவா பயன்படும்?’ என்று சரியாகத்தான் கேட்டார் ஜெயகாந்தன். ‘காற்றுமயமான இந்த உலகில் ஒருநாள் நான் சுவாசிக்கக் காற்றில்லாமல் மரித்துக் கிடப்பேன். அப்போது, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் காற்றையெல்லாம் என்னுள் செலுத்தினாலும், என் சுவாசகோசங்களைப் புரட்ட முடியாதே’ என்று மூச்சின் அருமையை அவர் உணர்ந்த அனுபவத்தை விதந்து சொல்வார்.
இப்படியல்லவா நாம் கடவுளின் அருமையை அனுபவிக்க வேண்டும். சரியான புரிதலே தரிசனம்! நன்றியே ஞானம்! நம்பிக்கைக்கும் அனுபவத்துக்கும் இடைவெளி இல்லாமல் இருப்பதே மானுட வெற்றி. எதையுமே நம்பாமல் ஒரு வாழ்க்கை வாழ முடியுமா? நீங்கள் இன்னொருவரை நம்பினாலும், ஒரு கருத்தை நம்பினாலும், உங்களை மட்டுமே நம்பினாலும் அது கடவுளை நம்புவதேயாகும்! ஏனெனில், அதற்கு அப்பாற்பட்டு ஒன்று இங்கே இல்லை. மீனுக்கு – கனவோ, நினைவோ, காதலோ, சண்டையோ, கலவியோ, களைப்போ, உறக்கமோ, விழிப்போ, தாகமோ, தீர்வோ – எல்லாமே நீரில்தானே, அது போலத்தான் இதுவும்.
இந்த இன்றியமையாமையை உணர்வதே நம்பிக்கை, ஐயம், குழப்பம், தரிசனம், ஞானம், எல்லாம்!
இது ஒரு கேள்வியாக மனத்தில் எழுந்து விட்டால், மெல்ல மெல்லக் கொழுந்துவிட்டு எரிந்தால், அது மனிதனைத் தூங்கவிடாது. பின்மண்டையைப் பிடித்து ஒருவனைத் தண்ணீருக்குள் அழுத்தினால் அவன் மூச்சுக்காக எப்படித் தவிப்பானோ அப்படி ஒருவன் இறை வனுக்காகத் தவிக்கும்போது அவன் தென்படுகிறான் என்பார் பரமஹம்சர்.
அறியாமையும் ஓர் அங்கம்: தவிப்பின் உச்சமும் தரிசனமும் ஒரே புள்ளியில், ஒரே கணத்தில் நிகழ்பவை. அந்த மிகச்சிறிய கணத்திலே தவம் என்னும் கனல்கூடச் சின்ன குமிழாக மாறிக் காற்றில் கரைந்து போய்விடுகிறது. அங்கே, ஒரு நிகழ்முறை (Process) எதுவும் கிடையாது. ஒரு பாதையை நாம் கோருகின்ற கணமே, அங்கே ஒரு தொலைவும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. இருக்கட்டும்! அந்தக் கணத்தை நோக்கி வாழ்வதற்கு ஒரு நிகழ்முறை பலருக்கும் தேவைப்படுகிறது. பிரார்த்தனை, தியானம், வாசிப்பு, பெரியோர் கேண்மை, விவாதங்கள், இலக்கியம், யாத்திரை இன்னும் என்னென்னவோ - இவையாவுமே அந்த நிகழ்முறையின் அங்கங்கள்தாம்.
கடவுள் மறுப்பு என்பது உண்மை தெரிய வில்லை என்னும் கோபத்தால் விளைவது. கடவுள் நம்பிக்கை என்பது உண்மையைக் காணவேண்டும் என்னும் தாபத்தால் எழுவது. இங்கே நான் நாத்திகர், ஆத்திகர் என்ற பெயர்களைக்கூடப் பயன்படுத்த விரும்ப வில்லை. உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்பும் மனிதர்கள் என்னும் பொருளில் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஒரு கோட்டிலிருந்து பார்க்கும்போது, இரண்டுமே ஒன்றுதான் என்பது விசித்திரமாக இருக்கிறது. இரண்டுமே அறியாமைதான். ஆனால், அந்த அறியாமையும் கடவுளின் ஓர் அங்கம்தான் என்பதை உணர்வதே கடவுளை நம் கண்முன் காட்டுகிறது.
தலையாய அறிவுரை: இரண்டும் கலந்தவராகத்தான் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் முன் நின்றார். குரு, சீடனுக்கு என்ன சொன் னார்? ‘ஒவ்வோர் உயிரிலும் உயிர்ப்பாய் இருப்பது இறைவனே. உன்னால் உன் சக மனிதர்களை இறைவனாகக் காண முடியாமல் போனால் உன்னிலோ, வேறெங்கோ உன்னால் ஒருபோதும் இறைவனைக் காண முடியாது’. தனக்குக் குருநாதர் வழங்கிய அறிவுரைகளில் இதைத்தான் தலையாயதாகக் கொண்டாடுகிறார் விவேகானந்தர்.
வெளியே வீசும் காற்று நம் மேனியை மருவும்போதெல்லாம், அது உள்ளுக்குள் இருந்தபடி ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் மூச்சுக் காற்றை நமக்கு நினைவுபடுத்தட்டும். அப்போது, நாம் ஒன்றுமில்லை என்னும் தகவலும், சுவாசமின்றி நாமில்லை என்னும் அறிவும், நம்மையும் சுவாசத்தையும் நடத்தும் இறைவனே இரண்டையும் காட்டிலும் இன்றியமையாதவன் என்னும் ஞானமும் ஒருசேர கிடைக்கும்.
அப்போது, எல்லாம் தீர்ந்த ஏகாந்த நிம்மதி யில் புன்னகை ஒன்று பூவாய் அரும்பும். அந்த ஞானத்தின் வாசத்தில் ஞாலமும் நலம்பெறும்.
கண்முன்னே தெரிவதெல்லாம் கடவுளாகவே தெரியும்!
(தரிசனம் நிகழும்)
- இசைக்கவி ரமணன்
tavenkateswaran@gmail.com