சதுர பீடத்தில் அருளும் காட்டூர் ஸ்ரீவாலீசுவரர்

சதுர பீடத்தில் அருளும் காட்டூர் ஸ்ரீவாலீசுவரர்
Updated on
2 min read

அக்காலத்தில் காடுகளைச் சார்ந்து ஊர் இருந்தால் அவ்வூரைக் காட்டூர் என்று அழைத்தனர். புறவார் பனங்காட்டூர், வன்பார்த்தான் பனங்காட்டூர் என்கிற பெயரில் இரண்டு தேவாரத் திருத்தலங்கள் உள்ளன. ஆர்க்காடு, ஆலங்காடு, விளாங்காடுபாக்கம், களக்காட்டூர் என்றெல்லாம் ஊர்ப் பெயர்கள் உண்டு. காடுகளைத் திருத்தி ஊர்கள் ஏற்பட்டவுடன் அங்கே காடுகள் இருந்ததைக் குறிக்கும் வகையில் அந்த ஊர்களைக் காட்டூர் என்கிற பெயரில் அழைக்கலாயினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர், சோழநாட்டில் உள்ள ஊர்களைப் போன்று நீர்வளம், நிலவளம் மிக்க அழகிய சிற்றூர். வற்றாத நீரை அளிக்கும் ஏரி ஒன்று ஊரின் அருகில் அமைந்திருக்கிறது. பசுமையான வயல்களும் நீர்நிலைகளும் இருப்பதால் ஈசன், அம்பிகை அருளோடு மன நிம்மதியையும் அளிக்கும் அற்புதத் திருத்தலமாக விளங்குகிறது காட்டூர் ஸ்ரீவாலீசுவரர் கோயில்.

வாலி வழிபட்ட தலம்: அழகிய ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் இந்தக் கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலை, ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது. கருவறை கஜப்பிருஷ்ட விமானத்துடன் (தூங்கானை மாடம்) அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் ஈசன் சதுரபீட அமைப்புடன் விளங்குகிறார். இதுபோன்ற சதுரபீட ஆவுடையாருடன் சிவலிங்க பாணம் அமைந்திருந்தால் அது ரிஷி பிரதிஷ்டையாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் அகத்தியர் வழிபட்ட கோயில்கள் இருப்பதால், இந்தச் சிவலிங்கமும் அகத்தியர், வாலி இருவரும் வழிபட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

கருவறைக்கு நேரெதிரே வாலியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 2011இல் குடமுழுக்கு செய்யப்பட்டபோது இந்தச் சிலை நிறுவப்பட்டதாகத் தெரிகிறது. விநாயகர், பாலசுப்பிரமணியர், நடராஜர், நவகிரகங்கள், கோஷ்டமூர்த்திகள் ஆகியோருடைய சந்நிதிகள் இக்கோயிலில் உள்ளன. நவகிரக சந்நிதிகள் வட கிழக்குத் திசையில்தான் பொதுவாக எல்லாச் சிவாலயங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கே அக்னி மூலையான தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது அபூர்வ அமைப்பாகும்.

அபயமளிக்கும் ஸ்ரீதிரிபுரசுந்தரி: அம்பிகை திரிபுரசுந்தரியின் சந்நிதி தெற்குப் பார்த்த நிலையில் உள்ளது. நான்கு திருக்கரங்களோடு பாசாங்குசம் ஏந்தி அபய, வரத திருக்கரங்களோடு அன்னை காட்சியளிக்கிறாள். பழம்பெரும் கோயில்களில் அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி என்றே வழங்கப்பெறுகிறது.

தலமரம்: இக்கோயிலின் தலமரமாக மகிழமரம் உள்ளது. திருவொற்றியூர் கோயிலில் இந்த மரத்தை மையமாக வைத்து ‘மகிழடி சேவை’ என்னும் உற்சவம் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மரம் வாசனை மிகுந்த பூக்களோடு அடர்த்தியான கிளைகளோடு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். அனுஷ நட்சத்திரத்துக்கு உரிய மரம் இது.

மகா வில்வம்: பல இதழ்களைக் கொண்ட அதிசயமான மகா வில்வ மரம் இக்கோயிலில் உள்ளது. இந்த அரிய மரம் இங்கே அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அதிகபட்சமாக 13 இதழ்கள்கூட இதில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அசுவினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்களின் மரங்கள் இக்கோயிலில் உள்ளன. இந்த மரங்கள் இருப்பதால் 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இங்கே வந்து வழிபடுவது பலனைத் தரும். இக்கோயிலில் சூரியனுக்குத் தனிச் சந்நிதி பிரகாரத்தில் அமைந்துள்ளது.

கிராம தேவதைகள்: கோயிலுக்கு மேற்கே ஓர் ஏரியும் தெற்கே தாமரைத் தடாகமும் உள்ளன. இந்தக் கோயிலுக்கு நேரெதிரே பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சாதாரணமாக அந்தக் கால அக்ரஹாரங்களில் அந்தணர் வாழும் தெருவுக்கு மேற்குப்புறத்தில் பெருமாள் கோயிலும் ஈசான்ய பாகத்தில் சிவன் கோயிலும் அமைந்திருக்கும். இங்கே சிவன் கோயிலுக்கு நேரெதிரே பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூ தேவியுடன் பெருமாள் காட்சி தருகிறார்.

பொங்கியம்மன், செல்லியம்மன், கண்ணுறு அம்மன் ஆகிய மூன்று கிராம தேவதைகள் இங்கே குடிகொண்டு அருள்செய்கின்றனர். பிரகாரத்தில் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு மிகவும் உகந்த செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நாகங்களை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

அமைவிடம்: ஸ்ரீவாலீசுவரர் கோயில். சென்னையிலிருந்து 33 கி.மீ, தொலைவிலும் மீஞ்சூரில் இருந்து 10 கி.மீ, தொலைவிலும் உள்ளது.

-மஹேந்திரவாடி உமாசங்கரன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in