யானைக்கு சாபவிமோசனம் அளித்த ஆனையூர் கோயில்!

ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
Updated on
2 min read

திருக்குறுமுள்ளூர் தலத்தில் அருள்பாலித்திருக்கும் அக்னீஸ்வரமுடையார் ஆலயம் புராணச் சிறப்பு மிக்கது. ஒரு சமயம் கங்கைக் கரை புண்ணியத் தலமான காசிமாநகரில் தவத்தில் சிறந்த துர்வாசர் யோக நிலையில் அமர்ந்திருந்தார். அவரது ஆழ்ந்த தவத்தையும் பக்தியையும் மெச்சிய இறைவன் முனிவருக்கு ஏதேனும் ஒரு பரிசளிக்க விரும்பினார். அதன்படி தம் கற்றைச் சடாமுடியிலிருந்து தூய நறுமணம் வீசி நிற்கும் தாமரை மலர் ஒன்றை அந்த முனிவரின் கையில் விழச் செய்தார். இறைவனின் அகமகிழ்வால் தனக்கு வெகுமதியாய் அளிக்கப்பட்ட அத்தாமரை மலரைப் பார்த்து ஆனந்த பரசவத்தில் திக்குமுக்காடிப்போனார் துர்வாசர்.

காட்டு யானையான ஐராவதம்: அதேவேளை தேவலோகத்து அரசனான இந்திரன் தனது வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானை மீதேறி அவ்வழியாகப் பறந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்ட துர்வாசர் உற்சாகத்தோடு அம்மலரை இந்திரனிடம் கொடுத்தார். வெற்றி மமதையால் உலா வந்துகொண்டிருந்த இந்திரன், அத்தாமரை மலரின் மகத்துவத்தை உணரவில்லை. அலட்சியத்தோடு அதை வாங்கி ஐராவதத்தின் மேல் வைத்தான். அவனைவிடத் தலைக்கனத்தில் இருந்த ஐராவதமோ அந்த அரிய மலரை அலட்சியமாகக் கீழே போட்டுத் தன் காலால் மிதித்துச் சிதைத்தது.

ஐராவதீஸ்வரர்
ஐராவதீஸ்வரர்

அற்புதமான சிவப்பிரசாதத்தின் சிறப்பை உணராமல் செயல்பட்ட இந்திரனைப் பார்த்து ஆவேசம் கொண்டார் முனிவர். அவனைப் பார்த்து, “யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருக்கும் உன் மணிமுடியானது பாண்டிய நாட்டு வீரன் ஒருவனின் சக்ராயுதத்தால் சிதறுண்டு போகும். அதோடு உமது வாகனமாகிய வெள்ளை யானை ஐராவதம் பூலோகத்தில் இனி காட்டு யானையாக மாறி அலையும்” எனச் சாபம் அளித்தார்.

திருவிளையாடல் புராணச் சான்று: அடுத்த கணமே ஐராவதம், பூலோகம் வந்து காட்டில் அலைந்து திரிந்தது. பின்னர் திருக்குறுமுள்ளூர் தலத்தில் இருந்த இறைவனைப் பூசை செய்து வழிபட்டது. அதனால், அதன் சாபம் நீங்கி மறுபடியும் தேவலோகத்தின் ஐராவதமாக உருப்பெற்று வானுலகம் திரும்பியது. இந்தக் காரணத்தாலேயே இத்தலத்துக்கு ஆனையூர் என்னும் பெயர் ஏற்பட்டது.

அம்பாள் மீனாட்சி
அம்பாள் மீனாட்சி

திருவிளையாடல் புராணத்தில் இத்தல வரலாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி இவ்வூர்ப்பெயர் ஒரு காலகட்டத்தில் ஆனையூர் என்றும் மூலவர் பெயர் ஐராவதீஸ்வரர் என்றும் மாற்றியமைக்கப்பட்டது. இரு சுற்றுக்களுடன் மேற்கு பார்த்த தலமாக இக்கோயில் அமைந்துள்ளது. ஆஸ்தான மண்டபச் சுவரில் நாயக்கர் கால தெலுங்குக் கல்வெட்டு உள்ளது.

தில்லைக்கூத்தருக்கு ஆறுகால பூஜை: ஆஸ்தான மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் கற்றளியாகக் கோயில் கம்பீரமாக அமைந்துள்ளது. மகாமண்டப வடப்புறம் அம்பாள் மீனாட்சி சந்நிதி, தில்லைக் கூத்தர் சந்நிதி, மகாமண்டப தென்புறம் ஜேஷ்டாதேவி, மாந்தன், மாந்தி சந்நிதிகளும் உள்ளன. அக்காலத்தில் ஜேஷ்டாதேவி சந்நிதி பரவலாகப் பல்வேறு இடங்களிலும் முக்கிய இடம் வகித்தது. தில்லைக்கூத்தருக்கு ஆனித் திருமஞ்சனம் உள்பட ஆண்டுக்கு ஆறுகால பூசை சிறப்பாக நடைபெறுகிறது.

உள்சுற்றில் இரட்டை விநாயகர், கால பைரவர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. மூலவர் விமானம் நாற்கர வடிவிலும், அம்பாள் விமானம் வேசர வடிவிலும் அமைந்துள்ளது. தலவிருட்சம் வில்வம். வெளிச்சுற்று முழுவதும் வாசமலர்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனம் பசுஞ்சோலையாக உள்ளது.

ஜேஷ்டா தேவி
ஜேஷ்டா தேவி

பிரதோஷ வழிபாடு, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை முதல், கடைசி சோமவாரங்களில் 108 சங்காபிஷேகம், மார்கழி 30 நாள்கள் திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல், ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி எனப் பல விழாக்கள் உற்சாகமாக இந்த ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றன.

அமைவிடம்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி - செக்கானூரணி நெடுஞ்சாலையில் 7 கி.மீ. தொலைவு பயணித்து பொட்டில்பட்டி விலக்கில் இறங்க வேண்டும். அங்கிருந்து 1 கி.மீ. பயணித்தால் ஆனையூர் திருத்தலம் சென்றடையலாம். தரிசன நேரம்: மாலை 4.00 மணி - இரவு 7.30 மணி.

- vganesanapk2023@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in