

அண்மையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளையொட்டி பாரதிய வித்யா பவனில் டாக்டர் சுதா சேஷய்யன் நிகழ்த்திய உரையிலிருந்து சிறு பகுதி: தூய்மையின் பெயரால் பல நேரம் சுற்றுச்சூழலுக்கு எவையெல்லாம் உகந்ததில்லையோ அவற்றை எல்லாம் செய்யத் தொடங்கி விடுகிறோம். இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் பயன்படுத்தும் பொருள்கள் சூழலை அதிகம் பாதிக்கின்றன.
நம்முடைய கிராமங்களில் ஒரு பழக்கம் உண்டு. அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்வார்கள். அதை ஏதோ விளையாட்டாகவோ, பழைய பஞ்சாங்கமாகவோ செய்யவில்லை. ஏன் அரச மரத்துக்கும் அரச மரத்துக்கும் செய்யவில்லை? மண்ணிலிருந்து சத்தை எடுக்கும்போது இரண்டு வகையான மரமும் வெவ்வேறு விதத்தில் சத்தை எடுக்கும். இரண்டும் ஒரே வகையான மரமாக இருந்தால் ‘பாராசைட்’ ஆகிவிடும். மரம் வளராது. இந்த நுட்பம் தெரிந்தவர்களாகக் கிராமத்தில் இருப்பவர்கள் இருந்தனர்.
கார்த்திகை தீபத்தின்போது வீடுகளில் விஷ்ணு தீபம் ஏற்றுவார்கள்; கடைசியாகக் குப்பை தீபம் ஏற்றுவார்கள். மழைக்காலத்தில் எறும்பு போன்ற ஜீவராசிகளின் புற்றுகளில் மழைநீர் புகுந்துவிடுவதால் அவை அங்கிருக்க முடியாது. அவை இலை, தழைகளில்தான் வாழும். குப்பைகளில் உறையும் புழு பூச்சிகளுக்கு ஒரு கதகதப்பைக் கொடுக்கத்தான் குப்பை தீபம் ஏற்றப்பட்டது.