

முக்கண்ணராகிய ஈசன், முகத்தில் இரண்டு கண்களும் நெற்றியில் ஒரு கண்ணும் கொண்டவர். அவரைப் போலவே மூன்று திருநயங்களோடு காட்சிதரும் முகுந்தனைத் தரிசிக்க வேண்டுமா? அப்படியென்றால், நீங்கள் செல்லவேண்டிய தலம் பரங்கிப்பேட்டை வரதராஜப் பெருமாள் ஆலயம்.
ஆதியில் முத்துகிருஷ்ணபுரி, வருணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இத்தலத்தில், பழமை வாய்ந்த தேவி, பூமாதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.
சிவன் அம்சத்தில் பெருமாள்: கஜேந்திர மோட்சம் பெற்ற திருத்தலமாக இது கருதப்படுகிறது. திருவஹீந்திபுரம் தேவநாதசுவாமியின் அபிமான தலம் என்றும் கூறப்படுகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், முகலாயர் காலத்தில் முன்மண்டபம் கட்டப்பட்ட கோயில். தலவிருட்சம் அரளி. தீர்த்தம் சந்திர புஷ்கரணி.
நெற்றிக்கண் என்பது சிவன் அம்சம். இங்கு கருவறையில் எழுந்தருளியுள்ள வரதராஜப் பெருமாளுக்கு நெற்றிக்கண்ணும் இருப்பதால், ‘இருவராகிய ஒருவர்' என்கிற திருநாமமும் இவருக்குண்டு. இப்பெருமாளை வணங்குவோருக்கு எமபயம் என்பதே கிடையாதாம். திருமணத் தடை, கடன் தொல்லை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வீண் பழிக்கு ஆளானவர்கள் இத்தலத்திற்கு வந்து பெருமாளை மனமுருகி சேவித்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதிகம்.
கோடைக்கேற்ற தைலக் காப்பு: சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை மூலவருக்குத் தைலக் காப்பு சாற்றப்படுகிறது. கோடைக்காலம் என்பதால் இந்த ஏற்பாடு. ஹஸ்த நட்சத்திரத்தன்று பெருமாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
சித்திரை மாதப் பிறப்பு அன்று நடைபெறும் கருட சேவையில் ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். சித்ரா பவுர்ணமியன்று சுவாமி மாட வீதி வழியாக புறப்பட்டுப் பக்தர்களுக்குச் சிறப்புக் காட்சி தருவார்.
வைகாசி மாதம் சஷ்டி திதியில் வசந்த உற்சவம் நடைபெறும். வைகாசி மாதம் தொடங்கி ஆனி, ஆடி மாதம் வரை 48 நாள்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று கஜேந்திர வரதருக்கு விசேஷ திருமஞ்சனம், கோகுலாஷ்டமியில் சுவாமி புறப்பாடு, மாலை உறியடி உற்சவம் ஆகியவை நடைபெறும்.
திருப்பதியின் சேவைகள்: புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி சீனிவாச பெருமாள் திருக்கோலத்தில் மூலவரான வரதராஜப் பெருமாள் மஞ்சள் பட்டு உடுத்தி, பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இந்த மாதத்தில் திருப்பதியில் பெருமாளுக்கு என்னென்ன சேவைகள் செய்யப்படுமோ அவை அனைத்தும் இங்கும் பெருமாளுக்குச் செய்யப்படுகின்றன.
நவராத்திரி உற்சவத்தில் பத்தாம் நாள் கஜேந்திரவரதர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போட்டுவிட்டு வருவார். தீபாவளி, திருக்கார்த்திகை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. மார்கழியில் விசேஷ பூஜை, தனுர் மாத பூஜை, வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு, மாசிமக தீர்த்தவாரி, பங்குனியில் திருக்கல்யாணம் ஆகியவை இந்த ஆலயத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
இத்தலத்தில் உள்ள கஜேந்திர புஷ்கரணியை ருண, ரண நிவாரணி என்கிறார்கள். அதாவது இதில் நீராடினால் கடன் பிரச்சினைகள், நோய்கள் ஆகியவற்றில் இருந்து மீண்டுவிடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்க வல்லது என நம்பப்படுகிறது. இதை வரதராஜப் பெருமாளுக்கு முன்னால்தான் அருந்த வேண்டும். இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அருந்தக்கூடாது. அப்படி அருந்தினால் அதற்குப் பலன் கிடைக்காது என்கிறார்கள்.
அனுமன் பெற்ற உபதேசம்: இத்தலத்தில் சஞ்சீவிராயர் என்கிற திருநாமத்தில் சேவை சாதிக்கும் அனுமனிடம் கஜேந்திரனைப் பற்றி வரதராஜப் பெருமாள் உபதேசித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை வரதராஜப் பெருமாள், கோயிலின் எதிரே இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு எழுந்தருள்வார்.
நெற்றிக்கண்ணோடு இருக்கும் வரதராஜப் பெருமாளை வாழ்க்கையில் ஒருமுறை தரிசித்தாலும் நிச்சயம் பரமபதம் அடையலாம் என்கிறார்கள். இந்தக் கோயிலின் வெளி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால், மனப் பாரம் குறையும் என்பது நம்பிக்கை. முக்கண் பெருமாளைத் தரிசிக்க நீங்களும் ஒரு முறை பரங்கிப்பேட்டை வாருங்கள்.
அமைவிடம்: கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே இக்கோயில் உள்ளது. பரங்கிப்பேட்டைக்குச் செல்ல கடலூரில் இருந்தும் சிதம்பரத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. கோயில் காலை 9 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.