

யேசுநாதர் வாழ்ந்த நாள்களில் வித்தியாசமான போதனைகளாலும் அவர் செய்த அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரைக் காண விரும்பினர். அவர்களில் ஒருவர்தான் அந்நாள்களில் வரி வசூல் செய்பவர்களுக்கெல்லாம் தலைவனும் பணக்காரனுமாக இருந்த சகேயு என்பவர்.
அக்காலத்தில், வரி வசூல் செய்பவர்கள் மக்களைத் துன்புறுத்தி அதிக பணத்தை வசூல் செய்து அதில் ஒரு பகுதியைத் தாங்கள் வைத்துக்கொண்டு மற்றொரு பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துவார்கள். அதனால், மக்களுக்கு வரி வசூல் செய்பவர்களைக் கண்டாலே பிடிக்காது. மேலும், வரி வசூல் செய்தவர்கள் பணக்காரர்களாகவும் மக்களால் வெறுக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள்.
யேசுவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஆவலுடன் இருந்த சகேயுவுக்கு ஒருநாள் அந்த அரிய வாய்ப்பு கிட்டியது! யேசு அவரது ஊரின் வழியாகச் செல்கிறார் என்கிற செய்தி அவருக்கு எட்டியது.
சகேயு உயரம் குறைந்தவர். யேசுநாதரைச் சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நெருங்கி அவரைப் பார்க்க முடியாது என்பதை சகேயு அறிந்துகொண்டார். அதனால், யேசு வருவதற்கு முன்னரே அந்த வழியில் இருந்த ஓர் அத்தி மரத்தின் மீது ஏறி, யேசு அந்த வழியாகச் செல்லும்போது அவரைப் பார்க்க ஆயத்தமாக இருந்தார்.
அதிகமான மக்கள் கூட்டத்துக்கு நடுவே யேசு தூரத்தில் வந்து கொண்டிருந்தார். சகேயுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி! நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறப் போகிறது! யேசுவை நேரடியாகப் பார்க்கப்போகிற சந்தோஷத்தில் வழி மேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சகேயு. அதுவரை நடந்து வந்து கொண்டிருந்த யேசு, சகேயு ஏறி இருந்த அத்தி மரத்தின் கீழ் வந்தவுடன் மரத்தின் கீழேயே நின்றுவிட்டார்!
யேசு அண்ணாந்து பார்த்து “சகேயுவே இறங்கி வா” என்று கூப்பிட்டதோடு, “இன்றைக்கு உன் வீட்டில் தங்கப்போகிறேன்” என்றும் சொன்னார்.
இதைக் கேட்ட சகேயுவுக்குச் சந்தோஷத்தில் தலை, கால் புரியவில்லை. யேசுவை எப்படியாவது பார்த்தால் மட்டும் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு, தன் வீட்டுக்கே அவர் வந்து தங்கப் போகிறார் என்பதைக் கேட்டதும் மகிழ்ச்சிக் கடல் பெருக்கெடுத்தது!
மகிழ்ச்சியுடன் யேசுவைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவர், “என்னுடைய ஆஸ்தியில் பாதியை இப்போதே ஏழைகளுக்கு நான் கொடுக்கப்போகிறேன்; நான் யாரிடமாவது அநியாயமாகப் பணம் வாங்கியது உண்டானால் அதை நான்கு மடங்காகத் திரும்பக் கொடுக்கப்போகிறேன்” என்று சொன்னார்.
இதைக் கேட்ட யேசு, “இன்றைக்கு இவருடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு, இந்த வீட்டுக்கு மீட்பு வந்தது” என்றார். இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மக்களோ, இவர் என்ன பாவியான இந்த சகேயு வீட்டில் தங்கப்போகிறார் என்று முணுமுணுத்தார்கள்.
இயேசுவோ, “பாவம் செய்து கடவுளின் அருளை இழந்து போனவர்களை நித்திய வாழ்வுக்கென்று மீட்டெடுக்கவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன்” என்று தன்னைச் சுற்றிலும் கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம் சொன்னார்.
மேலும், “தங்களது குற்றங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் உண்மையாகவே மனம் வருந்தி ஆண்டவரின் இரக்கத்தைக் கேட்கும் யாவருக்கும் என்னுடைய அருளைக் கொடுப்பேன்” என்றார்.
- merchikannan@gmail.com