தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 18 | திருவானைக்கா: திருவருள் தரும் திருவானைக்கா!

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 18 | திருவானைக்கா: திருவருள் தரும் திருவானைக்கா!
Updated on
2 min read

“பாடற் காதற் புரிவோனே பாலை தேனொத் தருள்வோனே

ஆடற்றோகைக் கினியோனே ஆணைக்காவிற் பெருமாளே.” - திருப்புகழ்

வாழ்க்கை என்னும் கடலின் இருபுறமும் கரைகளாக இன்பமும் துன்பமும் மட்டுமே இருக்கிறது. அதில் விழுந்து நீந்திக் கரை ஏறினாலும், மீண்டும் அதே அலைகளில் சிக்கி அழைக்கழிக்கப் படுகிறோம்.

அடியார்க்கு நல்லவன் ஆறுமுகன். கந்தரலங்காரப் பாடல் ஒன்றில் முருகனை நம்பினால் இந்தக் கடலில் மூழ்க மாட்டோம் என்கிறார் அருணகிரியார்.

“முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்

மிடியால் படியில் விதனப் படார்.... அடியார்க்கு நல்ல

பெருமாள் அவுணர் குலம் அடங்கப் பொடி ஆக்கிய

பெருமாள் திரு நாமம் புகல்பவரே’” என்று துதிக்கிறார்.

கந்தா, முருகா, ஷண்முகா, வேலவா என்று அவன் நாமத்தை ஜெபிப்பவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை என்கிறார் அருணகிரியார். முருகனைத் தலம் தோறும் சென்று பூஜித்த அருணகிரிநாதர் எங்கெல்லாம் முருகன் குடியிருக்கிறான் என்று தேடித்தேடி அலைந்து அங்கு திருப்புகழ் பாடியிருக்கிறார்.

ஈசனுக்கு உரிய பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவானைக்காவிலும் அவர் முருகனைத் தரிசித்து, முருகா உன்னாலேயே இந்த இடம் சிறப்படைகிறது என்று பெருமையுடன் பாடுகிறார். அவர் தரிசித்த 94வது தலம் திருஆனைக்கா. இது அப்புத் (நீர்த்தலம்) தலம்.

கோயில் சிறப்பு: சிவ கணங்களில் இருவர் சாபத்தினால் சிலந்தியாகவும், யானையாகவும் வந்து இங்கு பிறக்கிறார்கள். சிலந்தி, ஈசனின் தலைக்கு மேல் வலை கட்டி பூஜை செய்ய, யானை இது அநாசாரம் என்று அதைப் பிய்த்து எறிந்தது. கோபம் கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்து குடைய இருவருக்கும் சாப விமோசனம் கிடைத்தது. சிலந்தியே கோட்செங்கண் எனும் சோழ அரசனாகப் பிறந்தான்.

முற்பிறவி வாசனையால் யானை புகாத வண்ணம் எழுபது மாடக் கோயில்கள் கட்டுகிறான். அதில் ஒன்று திருவானைக்கா. இங்கு அம்பிகை மிகவும் உக்கிரமாக இருப்பதால்  ஆதிசங்கரர் தேவிக்கு முன்னும் பின்னும் முறையே விநாயகரையும் முருகனையும் பிரதிஷ்டை செய்து, அம்பிகைக்கு சக்கரம் போல் இரண்டு தாடகங்களை அணிவித்தார். இங்குள்ள முருகனைப் போற்றி அருணகிரியார் பதினைந்து பாடல்கள் பாடியுள்ளார்.

திருப்புகழ் தேனமுதம்: சுந்தரபாண்டியனின் திருநீற்றுமதில் பற்றிய ஒரு செய்தியை தன் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

`துங்க கஜாரணியத்தி லுத்தம சம்பு தடாகமடுத்த தக்ஷிண

சுந்தர மாறன் மதிட் புறத்துறை பெருமாளே' என்று முருகன் இருக்கும் இடத்தைச் சொல்கிறார். பூஜை செய்யாமல் தான் அழிந்து விடக் கூடாது என்ற ஆதங்கம் அவரின் பாடல் ஒன்றில் வெளிப்படுகிறது.

“அன்புடன் நாவிற் பாவது சந்தம் ஓதிப் பாதமும்

அங்கையினால் இனிப் பூசையும் அணியாமல்

ஏழைப் பாவியேன் அழிவேனோ?” என்று கந்தனிடம் கேட்கிறார்.

தன் திருப்புகழ் ஒவ்வொன்றிலும், மற்ற தெய்வங்களின் லீலைகளைச் சொல்லி வரும் அருணகிரியார், இங்கும் “சீறல் ஏன பதிதனை கோலக்காலமாக அமர் செய்த வடிவேலா” என்று வராக அவதாரம் பற்றிக் கூறுகிறார். ஹிரண்யாக்ஷனை வராக அவதாரம் எடுத்து வதம் செய்த பின்னும் திருமாலின் கோபம் அடங்கவில்லை. அப்போது குமரன் வராகத்துடன் போர் செய்து, அதன் கொம்பை ஈசனிடம் தர அவர் அதைத் தன் திருமார்பில் அணிந்தார் என்பது புராணச் செய்தி.

அனித்தமான ஊன் உடல்: இந்த உடல் அநித்தியமானது. அழிந்து விடும். எனவே

`அனித்தமான ஊனாளும் இருப்பதாகவே நாசி அடைத்து

- - - - - - - - அவத்தில் ஏகுவாழ் மூலி புசித்த

வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல்'

என்றும் சிவயோகியாக விளங்கும்படி நீ அருள வேண்டும் என்கிறார் நாதர்.

“யான் வேறு என் உடல் வேறு செகத்தில் யாவும் வேறாக

நிகழ்ச்சியா மனோதீத சிவச் சொரூபமா யோகி யென ஆள்வாய்”

என்றுதான் கேட்கிறார். ஞானசம்பந்தராக வந்து தேவாரம் தந்தவர் முருகனே என்று “தமிழ் வேதச் சோதிவளர் காவைப் பெருமாளே” என்றும் துதிக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மூலம் முருகனே. அவனைத் துதித்தால் அனைத்து கடவுள்களையும் துதித்த பலன் கிடைக்கும். இதைத்தான் `கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே' என்கிறது ஒரு பாடல். கந்தனையே போற்றினால், புகழ்மிக்க வாழ்வை அருள்வான்.

(புகழ் ஓங்கும்)

- gaprabha1963@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in