ஞானத்தை உள்ளத்தில் குடியேற்றும் அம்பாள்!

ஞானத்தை உள்ளத்தில் குடியேற்றும் அம்பாள்!
Updated on
2 min read

எந்த தெய்வத்தைத் துதித்தால் ஞானம் கிடைக்கும்? தியானிப்பதை அம்பாளிடமிருந்துதான் தொடங்க வேண்டும். அதிலும் எட்டு எழுத்துகளைத் தன்னுடைய நாமத்தில் கொண்ட திரிபுர சுந்தரி அம்பாளை வணங்க வேண்டும்.

முப்புரம் அல்லது திரிபுரம் என்பது Triad என்ற நம் மனதில் உள்ள முடிச்சுக்கள். இவையெல்லாம் தனித்தனி என்று பார்க்கும் தன்மை. சமாதி நிலையை அடையும்போது, இந்த மூன்று நிலையும் மறைந்துவிடுகிறது. இது சிவத்தை அடைவது. பேரானந்தம் அடைவது என்று சொல்வர். திரிபுர சுந்தரி அம்பாளைத் தியானித்தால் அம்பாளின் அன்பு, கருணையால் இறைவன் உள்ளத்தில் அல்லது அறிவில் குடியேறுவார்.

திருக்கழுக்குன்றத்தின் சிறப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுக்குத் தனிக் கோயில் உள்ளது. சுயம்பு வடிவத்தில் காட்சியளிக்கிறது. அஷ்டகாந்தம் மற்றும் எட்டு விதமான வாசனை மூலிகைகளால் உருவாக்கப்பட்டு, மங்களங்கள் அருளும் அன்னையாக திரிபுரசுந்தரி அம்பாள் வீற்றிருக்கிறார்.

இக்கோயிலில் ஆடி உத்திரம், பங்குனி உத்திரம், நவராத்திரி விழாவில் நவமி திதி ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். பாத தரிசனம் பாவம் போக்கும். திரிபுரிசுந்தரி அம்பாள் தரிசனம் அகத்தில் இறைவன் குடியேற வழிவகுக்கும்.

இந்தத் தலத்துக்கு வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என வேறு பெயர்கள் உள்ளன. மலைமேல் உள்ள கோயில் திருமலைக் கோயில், ஊருக்குள் உள்ள கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலைக்கோயிலில் உள்ள இறைவன் பெயர் வேதபுரீசுவரர். தாழக்கோயிலில் பக்தவத்சலேசுவரர் என்று இறைவன் அழைக்கப்படுகிறார்.

மலை சுமார் 4 கி.மீ. சுற்றளவு கொண்டது. மூலவர் வேதபுரீசுவரர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாகவும், அம்பாள் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை காட்சி அருளுகின்றனர். இந்தத் தலம் கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர்பெற்றது.

தாழக்கோயில் நான்கு புறமும் கோபுரங்களுடன் மூன்று பிரகாரங்களைக் கொண்டது. இக்கோயிலில் திரிபுர சுந்தரி அம்பாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆண்டுக்கு மூன்று நாள்களைத் தவிர மற்ற நாள்களில் அம்பாளுக்குப் பாதத்தில்தான் அபிஷேகம் நடைபெறுகிறது.

சங்கு தீர்த்தம்: இந்தக் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே உள்ள தெருவில் சங்கு தீர்த்தம் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு உருவாகிறது. இங்கு கிடைத்த சங்குகள் தாழக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.

மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்தபோது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அப்போது முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் கூறப்படுகிறது. சங்கு தீர்த்தத்தில் புனிதநீராடி மலையை கிரிவலம் வருபவர்களுக்குப் பிணிகள் நீங்கி, சகல சௌபாக்யங்களும் பெருகும் என்பது ஐதிகம்.

- gomathivinayagam.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in