கண்முன் தெரிவதே கடவுள் 03: ஆன்மாவுக்கு ஆகாரம் எது?

கண்முன் தெரிவதே கடவுள் 03: ஆன்மாவுக்கு ஆகாரம் எது?
Updated on
2 min read

சின்ன பொறியினிலே திருமுருகு பிறந்தது.

சுண்ணாம்புக் காளவாய் ஒரு தமிழ்ச்சொல்லால் குளிர்ந்தது.

அவரை அந்தச் சுண்ணாம்புக் காளவாயில் அடைத்துப் பூட்டினார்கள். அப்புறம் திரும்பி வந்து அவர் எப்படி இருக்கிறார் என்று பார்ப்பதற்காகத் திறந்தார்கள். அவரோ ஒரு பதுமத்தில் அமர்ந்த பனித்துளிபோல் ஒய்யாரமாக வீற்றிருந்தபடி, ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ என்று பாடிக் கொண்டிருந்தார். சூரியனைக் காட்டிலும் வெப்பமுள்ள சுண்ணாம்புக் காளவாய் ஒரு தமிழ்ச்சொல்லால் குளிர்ந்து போனதா! அல்லது, அந்தக் காளவாய் நடுங்கும்படி அவருடைய தவக்கனல் தகித்ததா!

நம்பிக்கையும் அனுபவமும்: தமிழ் என்பது ஏதோ சொல்லும் பொருளும் உள்ள வெறும் மொழியல்ல. அது ஒரு வாழ்நெறி. தவமுறை. தெய்வக் கனல். சிவன் மீது அப்பருக்கு இருந்த நம்பிக்கையைச் செந்தமிழ் பற்றிக்கொண்டது. அதன்பிறகு காளவாயென்ன! கலியென்ன! ஊழியென்ன! உலகென்ன! தமிழும் நம்பிக்கையும் சங்கமிக்கும் இடத்தில் மனிதன் இறைவனாகிறான்.

அங்கே பிறக்கும் பாடல் நம்முள் இருக்கும் இறையைத் தூண்டி நமக்கு அனுபவத்தைத் தரவல்லது. நம்பி வருவதே அனுபவமா, அனுபவம் தருவதே நம்பிக்கையா என்று கேட்டால், என்ன விடை சொல்வது? தன்னில் ஆழ்ந்து தலைப்பட்டால் ஒரு விடை கிடைக்கத்தான் செய்கிறது:

நம்புவதே இங்கு அனுபவமே! அதில்

நரகமும் சொர்க்கமும் தவிர்ந்திடுமே!

பெற்ற அனுபவத்தை மற்றவர்க்கு எப்படிச் சொல்வது?

நம்புவதே வழி நானறிந்தேன்! என்றன்

நாதனே! உன்னருள்! நான் பிழைத்தேன்!

‘நான் ஆத்திகனானேன், அவன் அகப்பட வில்லை. நான் நாத்திகனானேன், அவன் பயப்படவில்லை,’ என்று நயம்படப் பாடுவார் கண்ணதாசன். ‘நான் கடவுளை நம்புகிறேன். ஆனால், அவன் தெரியவில்லையே!’ என்று மனமார வருந்துபவர்கள் உண்டு. நம்பிக்கை வேறு; நம்புவதாய்க் கருதிக் கொள்வது வேறு. நம்புவதாய்க் கருதிக் கொண்டிருப்பவர்கள், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். என்ன அது?

நம்பிக்கைதான் தரிசனம்! கதிரவன் எழுவதும் கமலம் திறப்பதும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் நிகழ்வுகள் அல்ல! இருட்டறையில் ஒளியைக் கொண்டு வந்தால், இருளை சன்னல் வழியே பிடித்துத் தள்ளவேண்டுமா என்ன! ஒளி நேர்ந்த தருணம், இருள் காணாமல் போய்விடுகிறதல்லவா! அப்படித்தான் நம்பிக்கையும், இறையனுபவமும். அவை, அடுத்தடுத்த நிகழ்வுகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், அது ஒரே நிகழ்வுதான்! விளக்கும் வெளிச்சமும் ஒன்றா இரண்டா?!

எனவே, நம்பிக்கைதான் அனுபவம்! நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்னும் பற்பல அடியார்களும் பாடி வைத்திருப்ப தெல்லாம் இசை, கவிதை, இலக்கியம் என்ற ரீதியில் கொள்வது போதாது. அவையாவுமே அனுபவத்தின் பதிவுகள். நம்பிக்கையின் சாசனங்கள்.

இதை மனத்தில் வைத்துக்கொண்டு, ‘மாசில் வீணையும்' பாடலைத் தொடுங்கள். சிவானுபவம் என்னவென்பதை நாமும் அனுபவிப்போம். ‘பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே’ என்று ஆழ்வாருடன் சேர்ந்து நாமும் பாடுவோம். அரங்கனைக் காண்போம்.

நான் மீண்டும் சொல்கிறேன். அடியார் களின் தமிழ்ப் பாடல்களை வெறும் பாடல்களாகக் கருதி விடாதீர்கள். முழு நாத்திகரான உவமைக் கவிஞர் சுரதாவே அதை, “தமிழ்க்கடவுள் தலையசைத்துக் கேட்ட பாடல்" என்பார்! அடியார்களுடைய அனுபவப் பதிவுகள் நமக்கும் அந்த அனுபவத்தைத் தூண்டும்.

கடவுளும் தமிழும் ஒன்றுதான். இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது என்பது மட்டுமல்ல, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இரண்டுமே நம்முள் ஏற்கெனவே இருப்பவை. நம்மை விட்டுப் பிரிக்க முடியாதவை. நம்பிக்கையும், தமிழும் இணையும் தளத்தில், இறைவனே ரசிக்கும் ஒரு மானிட மதர்ப்பு எழுகிறது!

அனுபவப் பாடல்கள்: அதுதான், திருநாவுக்கரசரை, “நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’’ என்று பாடவைத்தது. அதுவேதான், “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்! என் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்!” என்று பாரதியைச் சாட வைத்தது. “பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா! இறந்தபின்னே வரும் அமைதி வந்து விட்டதடா!” என்று கவியரசர் கண்ணதாசனை இசைக்க வைத்தது.

இவையெல்லாம் என்ன? மண்ணிலே விண்ணைக் கண்ட மதர்ப்புத் தெறிப்புகள்! இகத்தில் பரத்தைத் தொட்ட பரவச அனுபவத்தின் பறையறைகள்! இந்த சத்திய அனுபவங்கள் நமக்கும் சாத்தியமாகும் என்பதற்குச் சான்று காட்டவே தோன்றியது இறையனார் அருளி, முருகன் தலைமை வகித்து, அகத்தியன் வகுத்து, அடியார்கள் வளர்த்துத் தந்த அற்புதத் தமிழ்.

எங்கும் இருக்கும் சத்தியத்தை

எங்கே எதற்குத் தேட?

எதிரே சிரிக்கும் நித்தியத்தை

ஏதுக் கேங்கிப் பாட?

எங்கும் இனிமேல் தேடாதீர்!

எதிலும் காண மறுக்காதீர்!

இறைவன் புதிரே இல்லையடா! அவன்

எதிரே விளங்கும் எல்லையடா!

உள் - வெளி, உருவம் - அருவம், உயி ருள்ளவை – உயிரற்றவை என்ற பேதங் களைப் பேதைமை செய்து கொக்கரிக்கும் அனுபவப் பதிவுகளே அடியார்களின் பாடல்கள். அவை நம்மை ஏன் ஈர்க்கின்றன? நம்முள்ளும் அதே அனுபவம் விழிப்புறக் காத்திருக்கிறது. அதனால்தான் ஆயிரமாயிரம் வரிகளில், திடீரென்று சில வாக்கியங்கள் வாசகங்களாகி நம் அகத்தைக் கொள்ளை கொள்கின்றன.

சத்தியமே ஆன்மாவுக்கு ஆகாரம்! சத்தியமே தமிழுக்கு ஆதாரம்! கடவுள், சத்தியமோ இல்லையோ, அது புரிந்தாலும் புரியாமற் போனாலும் சத்தியமே கடவுள் என்பதில் மறுப்பேது!

உண்மை மிகவெளிது ஊரோ அறியாது

வண்ண மறிந்தவர்க்கே வாழ்வு

(தரிசனம் நிகழும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in