

சமூகத்தில் விளிம்பு நிலையைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கும் பரதநாட்டியக் கலையை சேர்த்துவருகிறது மீஞ்சூரில் இருக்கும் தில்லைக்கூத்தன் நாட்டியப் பள்ளி. இந்தப் பள்ளியை நிர்வகித்துவரும் பரதநாட்டியக் கலைஞர், குரு பி.சுரேஷிடம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடனம் பயின்றுவருகிறார், வடசென்னை முருகதனுஷ்கோடி பள்ளியில் எட்டாவது படித்துவரும் மாலினி. தான் படிக்கும் நடனப் பள்ளியின் சார்பாக நடக்கும் நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பள்ளி விழாக்களிலும் தவறாமல் தன்னுடைய நாட்டிய பங்களிப்பை அளிப்பவர் மாலினி.
அண்மையில் அவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ரசிக ரஞ்சனி சபாவில் நடந்தது. நாட்டிய மரபை மீறாத புஷ்பாஞ்சலி, கவுத்துவம் போன்ற நடன உருப்படிகளில் தன்னுடைய தேர்ந்த அபிநயங்களால் நாட்டியத்தை, நடன நுட்பங்கள் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் ரசனையான அனுபவமாக மாற்றினார்.
ஒரு முறை வந்த அபிநயம் அடுத்த முறை வராமல் புதிதாக அபிநயம் செய்வதை, ‘வந்தது வராமல்’ ஆடுவது என்று நடன விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள். அப்படியொரு நாட்டியத்தை அன்றைக்கு வழங்கினார் மாலினி. எல்லா வற்றுக்கும் மேலாக, சிவதாண்டவத்துக்கு ஏற்ப நாட்டியம் ஆடிக்கொண்டே மேடையில் விரித்தி ருந்த திரையில் தில்லை நடராஜரைத் தத்ரூபமாகக் கால்களால் வரைந்து அசத்தினார் மாலினி. அரிதான இந்தக் கலையை சித்திர நாட்டியம் என்பர்.