கண்முன் தெரிவதே கடவுள் 02: கடவுள் இல்லாத ஆளே இல்லை!

கண்முன் தெரிவதே கடவுள் 02: கடவுள் இல்லாத ஆளே இல்லை!
Updated on
2 min read

உள்ளம் மிகநுண்மை, தம்பி
உண்மையும் அதுபோலே!
கள்ளம் உள்ளேதான், தம்பி
கடவுளும் அதுபோலே!
மண்ணில் தனியொரு மண், தம்பி
மெளனம் அதுபோலே!
கண்ணைக் காணும் கண், தம்பி
கடவுளும் அதுபோலே!

கடவுள் ஓர் ஆளில்லை. ஆனால், கடவுள் இல்லாத ஆளே இல்லை. இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால் கடவுள் எல்லா ஆளாகவும் ஆகியிருக்கிறது. ஆள், கடவுளாக ஆகும்போதுதான் அது புரிகிறது என்பது வேறு சேதி.

கடவுள் என்னும் சொல்லுக்குக் ‘கடந்தால் உள்’ என்றொரு விளக்கமுண்டு. எதைக் கடக்க, எது உள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழுகின்றன. கடவுள் என்பது நமக்கு அப்பாற்பட்டிருக்கிற ஒன்று என்கிற நினைப்பை, கடவுள் நாமில்லை என்னும் நினைப்பை நாம் கடக்க வேண்டும். இப்படி யோசித்துப் பார்ப்போம். நாம் பூமியில் இருக்கிறோம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் வானத்தில் அல்லவா இருக்கிறோம். மண் மிகுந்த இந்த வையம், மற்ற கோள்கள், விண்மீன்கள், இனம்புரியாத உருளைகள் இவையனைத்தும் விண்ணில் அல்லவா இருக்கின்றன. தொகுத்தால் படைப்பு, வகுத்தால் விண், பகுத்தால் இறைவன். எல்லாவற்றையும் தவிர்த்து நின்றால் அது வெட்ட வெளி. இவ்வளவுதானே!
எனவே, வடிவங்கள், உருவங்கள் இவை யெல்லாமே வானத்தில்தான் இருக்கின்றன. உயிர் அல்லாத ஒன்று நாமறிந்த படைப்பில் கிடையாது.

வையகத்தே சட வஸ்துவில்லை
மண்ணும் கல்லும் சடமில்லை
மெய்யுரைப்பேன் பேய் மனமே
மேலுங் கீழும் பயமில்லை!

என்பான் பாரதி. ‘இருள் என்பதே மிகக் குறைந்த ஒளிதான்’ என்று வாதிடுவான். அப்படியானால், உயிர் குறைந்த வடிவம் இருக்கலாமேயன்றி உயிரே இல்லாத எதுவும் இங்கே இருக்க முடியாது. எங்கும் இருப்பது இந்த உயிர்தான். படைப்பு என்பது உயிர்மயம் என்று சொல்லி முடித்துவிடலாம். உயிரைப் பார்க்க முடியுமா? உயிர் என்பது உணரப்படும்போது அதற்கு உயிர்மை என்று பெயர்வைத்துக் கொள்ளலாம்.

எல்லாம் ஓருயிரே: பானையை மூடிவைத்தால், அதிலிருக்கும் காற்று சிறைபட்டுக் கிடக்கிறது. பானை உடைந்தால் அது மொத்தக் காற்றுடன் கலந்து விடுகிறது. இதுதான் மரணம் என்னும் நிகழ்வில் பொதுவாக நடப்பது. இங்கே இருக்கும் அத்தனை உயிர்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதன் விளக்கம், அத்தனையும் உயிர்களே என்பது மட்டுமல்ல, அத்தனை உயிர்களும் ஒரே உயிர் என்பதும்தான்! அதனால்தான், அறியாமல் போனாலும் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்கிறோம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

இந்த மொத்த உயிரும் ஓருயிரே. அதுதான் கடவுள். இப்போது சொல்லுங்கள் நாம் கடவுளிடமிருந்து எப்படி வேறாக இருக்க முடியும்? இந்தப் பொருளில்தான் அவர் இருக்கிறார் என்றோ, அந்தப் பொருளில் அவர் இல்லை என்று நினைப்பதோ அறியாமையே அல்லவா. வடிவம், உருவம் இவற்றைச் சாராமல் நம்மால் எதையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவேதான் பார்க்க முடியவில்லை, எனவே கடவுள் இல்லை என்றும் சொல்கிறோம். பழத்துக்குள்ளே இருந்தபடி அதை ரசித்துக்கொண்டேதான் இருக்கிறது வண்டு. ஆனால், அதனால் பழத்தைப் பார்க்க முடியுமா!
அது போலத்தான் நாம்!

கடவுள் என்னும் சொல்லில், ‘கடவு’ என்னும் சொல்லும் கண்சிமிட்டுகிறது. துறத்தல், கடத்தல் என்றும், வழி என்றும் பொருள் வருகிறது. அது மட்டுமல்ல ‘கடவு' என்றால் Password (கடவுச் சீட்டு என்பது போல்) என்னும் பொருளும் தோன்றுகிறது. கடவுளைக் காண்பதற்கு என்ன வழி? துறத்தலே! கடத்தலே! எதைத் துறப்பது? நாம் வேறு அவன் வேறு என்னும் நினைப்பை! எதைக் கடப்பது? அவன் எங்கோ ஓரிடத்தில், ஏதோவோரு வடிவாக இருக்கிறான் என்னும் எண்ணத்தை!

இருப்பது ‘உள்’தான். அதுதான் வெளியாகத் தெரிகிறது! இது உள்ளாழ்ந்து பார்த்தால் புரிந்துவிடுகிறது. யாருக்கும் இது அனுபவமாகலாம். தகவலாகத் தொடங்கி, ஒரு தர்க்கத்தின் முடிவாகத் தோன்றி, தத்துவமாக மிளிர்ந்து, தரிசனமாக மலர்ந்து, பிறகு தணிந்து தான் தானாக அடங்குவதெல்லாம் உள்தான் வெளி என்னும் அனுபவமே! உலக வாழ்வில் உழலும் நமக்கு உள் எப்படி அனுபவமாகும்? ஆகும். நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் நாம்தான் என்பதை மெல்ல உணர்ந்தால்.

உயிர்க் கூட்டம்: பாரதி, ஒரு சாதியைத்தான் பார்த்தான், அது மனிதச் சாதி. அதில் மனிதர்களல்லாத மற்ற உயிரினங்களையும் சேர்த்தே ஒரு சாதி என்கிறான். அத்துடன் நில்லாமல், கடலையும், மலையையும் இழுத்துச் சேர்த்துக்கொள்கிறான். மலை, அசையாது. கடல், ஒருநொடியும் நில்லாது.

இரண்டுக்கும் உயிரில்லை; ஆனால் அவையிரண்டும் கணக்கற்ற உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன. ஆக, காக்கையும் குருவியும் மனிதச் சாதி! கடலும் மலையும்? உயிரின் கூட்டம்! அந்த ஒவ்வோர் உயிரிலும் அவன் தன்னையே பார்த்து ஆனந்தம் எய்தி ஆடிப் பாடுகிறான்:

காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்!

நம்மைக் காட்டிலும் மிகுந்த துன்பங்களை எதிர்கொண்டவன் பாரதி. புறச் சூழ்நிலைகளால் புரண்டுவிடாமல் அவனால் இப்படிப் பார்க்க முடிந்தது. அது நமக்கும் சாத்தியமாக வேண்டும், இது நம்மால் முடியும் என்பதை நமக்கு உணர்த்தத்தான் அவனுடைய ‘உள்’ அனுபவத்தை அவன் பாடலில் சாசனப் படுத்தினான். படகில் ஏறிக்கொண்டால் ஆற்றைக் கடக்கலாம். இந்தப் பாடலில் தோய்ந்தால் நாம் கடவுளைக் காணலாம். கடவுளைக் கண்முன்பு காட்டும் வல்லமை கவிதைக்கு, அதுவும் தமிழ்க் கவிதைக்கு மிகவும் உண்டு!

(தரிசனம் நிகழும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in