

திருக்குர்ஆனில் நமக்கு உணர்த்தப்படும் உண்மைகளில் முக்கியமான சில இங்கே:
l ஆதிப் பெற்றோர் அனைவருக்கும் ஒருவரே! ஒரே தாய் தந்தையரிடமிருந்து மனித குலம் தோன்றியது எனில் ஒரு தாய் பிள்ளைகளில் எப்படி உயர்ந்தவன் தாழ்ந்தவன் இருக்க முடியும்? எவரும் நான் இன்ன குலத்தில், இந்த இனத்தில்தான் பிறப்பேன் என்று வேண்டி விரும்பிப் பிறப்பதில்லையே!
l மனித இனம் உலகில் பல்கிப் பெருகி உலகெங்கும் பரந்து பல இனங்களாக, குழுக்களாக விரிவடைந்தது. அவரவர் வாழ்ந்த தட்பவெப்ப, காலநிலைகளுக்கேற்ப வெளித்தோற்றத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் பல்வேறு இனங்களை அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுதானே தவிர ஏற்றத் தாழ்வு கற்பிப்பதற்காக அல்ல.
l உண்மையில் இறைவனிடம் கண்ணியத்துக்கு உரியவர், இறைவனை அஞ்சி ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள்தாம். ஒழுக்கமே உயர்வுக்கு அடையாளம் ஆகும்.
l எல்லா மனிதர்களையும் இறைவனே படைத்தான். எனவே, எல்லா மனிதர்களின் மீதும் இறைவன் சமமான அன்புடையவன். மதம், மொழி, பிறப்பு, நிறம், பால், நாடு இவற்றின் அடிப்படையில் இறைவன் பாகுபாடு காட்டுவதில்லை. மனிதர்கள் புரியும் நற்செயல்களை வைத்தே இறைவன் தீர்ப்பு வழங்குகிறான்.
l மனிதன் பிறக்கும்போது எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. எனவே, பிறப்பும் இறப்பும் அனைவருக்கும் சமமாக உள்ளன.
l மனிதனைப் படைத்த இறைவன் ஒருவன் எனும்போது மனித இனம் ஒன்றாகத்தானே இருக்க முடியும்?
சமத்துவத்தை நிலைநாட்டியவர்: நபிகள் நாயகம் அரேபியாவில் தமது பரப்புரையைத் தொடங்கியபோது ஏற்றத் தாழ்வுகள் உச்சக்கட்டத்தில் இருந்தன. அராபியர்களே உயர்ந்தவர் எனவும், அராபியர் அல்லாதவர்கள் ‘அஜமி’ (ஊமைகள்) எனவும் அழைக்கப்பட்டனர்.
குரைஷி இனம் உயர்ந்ததாகவும் மற்ற இனங்கள் தாழ்ந்ததாகவும் கருதினர். கறுப்பர்களை அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தினர். ஹஜ் யாத்திரையின்போது ‘உயர் சாதியினர்’ மற்றவரோடு இணைந்து வழிபாடு செய்ய மாட்டார்கள். நபிகள் நாயகம் இந்த நிலைமையை மாற்றிச் சமத்துவம் மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கினார்.
அடிமை வம்சத்தைச் சேர்ந்த பிலால் எனும் நபித்தோழருக்கு முதன்முதலாகத் தொழுகைக்கான அழைப்பு எனும் பாங்கு சொல்லும் பொறுப்பைக் கொடுத்தார். சாதி மறுப்புத் திருமணத்தை ஊக்குவித்தார். உயர்குலத்தைச் சேர்ந்த நபிகள் நாயகம் தமது உறவுப் பெண்ணான ஜைனப் பின்த் ஜஹ்ஷ் என்பவரைத் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஜைத் என்பவருக்கு மணமுடித்து வைத்தார். அடிமை வம்சத்தைச் சார்ந்த உஸாமாவைப் படைத்தளபதியாக நிர்ணயித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்குலத்தில் பிறந்தோர் தம் மக்களை மணமுடித்துக் கொடுக்கும் நிலையை உருவாக்கினார்.
மனமாற்றமே அடிப்படை: நபிகள் நாயகம் எப்படி 23 ஆண்டுகளுக்குள் இதைச் சாதித்தார் என்பது சிந்தனைக்கும் வழிகாட்டுதலுக்கும் உரியது. முதலில் அவர் செய்தது மக்கள் மனங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியதாகும். சமூகத் தீமைகளைப் பொறுத்தவரை மன மாற்றத்தை ஏற்படுத்தாமல் சட்டங்களால் எதையும் சாதித்துவிட முடியாது. நாம் முன்பு விவரித்த சிந்தனைகளின் அடிப்படையில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தார். அதற்கு வழிபாடுகளின் வாயிலாகச் செயல் வடிவம் தந்தார்.
குறிப்பாகத் தொழுகை ஒருமைப் பாட்டுக்கான சிறந்த பயிற்சித் தளமாக அமைந்தது. அனைவரும் எவ்வித வேறுபாடுமின்றி ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து தினமும் ஐந்து வேளைத் தொழுகை நடத்தியது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழுகையில் எவருக்கும் எந்த முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை. ஹஜ் கடமையின்போது எல்லா நாட்டவரும் மொழி, இன, நிறப் பேதமின்றி ஒன்றிணைவதற்குப் பயிற்சித் திட்டத்தை அளித்தார்.
உயர்குலத்தவர் என்று தம்மைக் கருதிக்கொண்டிருந்த குரைஷி இனத்தவரின் ஆணவத்தை அகற்றினார். கறுப்பு நிற அடிமை வம்சத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி, பதவிகளை அளித்து மேலே கொண்டுவந்தார். பிரிந்து கிடந்த உள்ளங்களை இணைத்தார். ஒருவரோடு ஒருவரை மோதவிடவில்லை. இருவருக்கிடையே மாச்சரியங்களைத் தோற்றுவிக்கவில்லை. அன்பினால் இதயங்கள் இணைந்தன என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது (3:103).
தொகுப்பு: நிஷா
நன்றி: இஸ்லாம் ஒரு பார்வை, கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது