

ராமர் என்றால் வில்தான் நம் நினைவுக்கு வரும். முருகன் என்றால் நம் நினைவுக்கு வருவது வேல். அப்படிப்பட்ட முருகன் தன் கையில் வேலின்றி, சங்கு சக்கரத்துடன் ஒரு சந்நிதியில் அருள்பாலிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதுதானே!
மூவுலகிலும் அசுரர்களின் தொல்லை அதிகரித்தது. தேவர்கள் சிவனிடம் மன்றாடினர். அந்த அசுரனை அழிக்க சிவபெருமான் முருகனை அனுப்பினார். முருகப் பெருமானுக்குத் தேவர்களின் தலைவன் இந்திரன் முதலானவர்கள் தங்களின் அரிய பாணங்களை வழங்கினர்.
மகாவிஷ்ணு தனது சங்கு, சக்கரத்தைப் பிரதான ஆயுதமாகக் கொடுத்து அனுப்பினார். மும்முதல் தெய்வங்களின் ஆசியுடன் முருகப்பெருமான் அந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். அந்நிகழ்வின் அடிப்படையில் தஞ்சாவூர் படிக்காசுநாதர் ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், திருமாலின் சங்கு சக்கரத்துடன் வில், அம்பு, வாள், கேடயம், கத்தி, வஜ்ராயுதம் போன்றவற்றுடன் காட்சி தருகிறார்.
கோயிலின் மூலவர் படிக்காசுநாதர். 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனார், ஈசனுக்குத் தினமும் அரசலாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கம். ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. அந்த நிலையில்கூடத் தவறாமல் இறைவனுக்கு இவர் அபிஷேகம் செய்தார்.
படிக்காசு அளந்த பரமன்: ஒரு நாள் ஈசனுக்கு அபிஷேகம் செய்துகொண்டிருந்தபோது, புகழ்துணை நாயனாருக்குப் பசிமயக்கத்தில் நிலை தடுமாறியது. நீர்க்குடம் இறைவனின் தலையில் விழுந்தது. இறைவனுக்கு அடிபட்டுவிட்டதோ என்றெண்ணி மயங்கி விழுந்தார் புகழ்துணை நாயனார். இறைவன் அவரது கனவில் தோன்றி, “பஞ்சம் தீரும் வரை தினமும் ஒரு பொற்காசு தருகிறேன்.
அதை வைத்து உன் பசியும் ஊர் பசியும் ஆற்றுவாயாக” எனக் கூறிவிட்டு மறைந்தார். அதன் பொருட்டு நாயனாருக்குத் தினமும் ஒரு படிக்காசு கொடுத்ததாகவும் அதைக் கொண்டு அவர் ஊர் மக்களின் பஞ்சத்தைப் போக்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது. படிக்காசு தந்து பஞ்சத்தை ஆற்றியதால் மூலவர், படிக்காசுநாதர் என அழைக்கப்பெற்றார்.
இங்கே வழிபடும் மக்கள் இரண்டு நாணயங் களைக் கொண்டு வணங்கி, அதில் ஒரு நாணயத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். இதன் மூலம் வீடு செழிக்கும், செல்வம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை. இக்கோயிலில் சூரியனும் சந்திரனும் கிழக்கு நோக்கி இல்லாமல் நேரெதிராகப் பார்க்குமாறு உள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க இத்தலத்தில் உள்ள முருகனுக்கு அமாவாசை யன்று பால் பாயசத்தைப் படையலிடுகின்றனர். புகழ்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தி அடைந்த இந்தத் திருத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் வேண்டுவதன் மூலம் தவறைத் தட்டிக்கேட்கும் மனப்பான்மையும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- ஸ்ருதி பாலசுப்ரமணியன், பயிற்சி இதழாளர்.