

ஐம்பத்திரண்டு சக்தி பீடங்கள் உருவாவதற்கான விதை இங்குதான் தொடங்கியது என்கிறார்கள் இந்து மதப் பண்டிதர்கள். அது தட்சேஸ்வர் மகாதேவ் ஆலயம். தட்சப் பிரஜாபதி ஆலயம் மகான் ரவீந்திர புரி என்பவர் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது. அவரைச் சந்தித்துப் பேசியபோது இந்தக் கோயிலின் தொன்மையான பெருமை குறித்து விளக்கினார்.
தட்சன் மகள் தாட்சாயினி: சிவபுராணத்தில் இந்தத் தலத்தின் மகிமை விளக்கப்பட்டிருக்கிறது. படைப்புக் கடவுளான பிரம்மன் ஆதிப ராசக்தியை மனம் உருகி வழிபட்டார். அவரது வேண்டுகோளின்படி பராச க்தியின் ஓர் அம்சமான சதி தேவி, தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். தட்சனின் மகள் என்பதால் சதி தேவி தாட்சாயினி என்றும் அழைக்கப்பட்டார்.
பிரம்மனின் மகன்களில் ஒருவரான தட்சப் பிரஜாபதி, அப்போது கங்கல் பகுதியை ஆண்டுவந்தார். சதி தேவி, சிவபெருமானைத் தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டார். தன்னை சிவபெருமான் மணந்துகொள்ள வேண்டும் என்று இறைஞ்சினார். ஒரு கட்டத்தில் சிவபெருமான், தாட்சாயினி தேவியைக் கவர்ந்து சென்று திருமணம் செய்துகொண்டார். அது முதல் சிவபெருமானை வெறுக்கத் தொடங்கினார் தட்சப் பிரஜாபதி.
மருமகனை அழைக்காத மாமனார்: மாபெரும் யாகம் ஒன்றை மன்னன் தட்சன் நடத்தினார். இதை மிகச் சிறப்பாக்க பல ரிஷிகளையும் முனிவர்களையும் அழைத்தார். கிட்டத்தட்ட அனைத்துக் கடவுளரையும் அந்த யாகத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார். அதென்ன கிட்டத்தட்ட? சிவபெருமானுக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை!
தாண்டவத்தைத் தணித்த திருமால்
இதை அறிந்ததும் தாட்சாயினிக்கு மிகுந்த வருத்தம் உண்டானது. இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க, தானே அந்த யாகசாலைக்குச் சென்றார். ஆனால், அவர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் தந்தை தட்சப் பிரஜாபதி அதற்குச் செவிமடுக்காமல் இருந்ததோடு தன் மருமகனை மிகவும் கேவலமாகவும் பேசினார். இது பொறுக்காத சதி தேவி அந்த வேள்வித் தீயில் விழுந்து தன் உயிரை நீத்தார்.
இந்தத் துயரச் செய்தியைக் கேள்விப் பட்டதும் சிவபெருமான் தனது போர்த் தளபதிகளில் முக்கியமானவரான வீரபத்திரரை கங்கலுக்கு அனுப்பினார். அவர் தட்சனின் தலையைக் கொய்தார். அந்த இடத்துக்குப் பின்னர் வந்து சேர்ந்த சிவபெருமான் யாகத்தில் எரிந்துகொண்டிருந்த சதி தேவியின் உடலைச் சுமந்தபடி ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார்.
இந்த உக்கிரம் தொடரக் கூடாது என எண்ணிய திருமால் தன் சக்கரத்தால் சதி தேவியின் உடலைப் பல துண்டுகளாக வெட்ட, ஒவ்வொரு துண்டும் பூமியில் விழுந்த இடம் சக்தி ஸ்தலமாகப் பின்னர் வழிபடப்பட்டது. ஒருவழியாக சினம் தணிந்தார் சிவபெருமான்.
தட்சனின் யாகம் உலக நன்மைக் காகவும் தொடங்கப்பட்டது என்பதால் அது நிறைவாக முடிய வேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. எனவே, சிவபெருமான் தலையற்ற தட்சனின் உடல் மீது ஓர் ஆட்டின் தலையைப் பொருத்தி உயிர்ப்பிக்க, அந்த விநோத உருவத்துடன் யாகத்தைத் தொடர்ந்து நடத்தி முடித்தார் தட்சப் பிரஜாபதி.
தட்சன் தன் தவறுகளுக்காக சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரினார். மனமிறங்கிய சிவபெருமான் ஒவ்வோர் ஆண்டும் தனக்கு மிகவும் விசேஷமான சிரவண மாதத்தில் கங்கலில் உள்ள சிவலிங்கத்தில் நேரடியாக உறைவதாகக் கூறினார்.
இந்த நிகழ்வை நினைவு படுத்துவதுபோல் இந்த ஆலயத்தின் கருவறையில் காணப்படும் சிவலிங்கம் மேற்பகுதி இல்லாது (ஆவுடையார் மட்டுமே கொண்டு) காணப்படுகிறது. இந்த லிங்கத்தைச் சுற்றி ஒரு பெரிய கோயில் பொ.ஆ.(கி.பி) 1810இல் எழுப்பப்பட்டது. இதை உருவாக்கியவர் கங்கல் உள்ளடங்கிய லந்தோரா என்கிற பகுதிக்கு அரசனாக விளங்கியவர். 1963இல் இந்தக் கோயில் புதுப்பிக்கப் பட்டது.
பசுமை சூழும் கோயில்: உஜ்ஜயினி, லிங்கேஸ்வர் ஆகிய ஆலயங்களில் காணப்படுவது போன்ற கோபுர அமைப்பை இந்த ஆலயத்தில் காணமுடிகிறது. வட இந்திய ஆலயங்களின் இலக்கணத்துக்கு ஏற்ப கோபுர உச்சிப் பகுதியில் காவிக்கொடி ஒன்றும் பறக்கிறது. கோபுரங்களுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியான வண் ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்தக் கோபுரங்களைச் சுற்றிலும் காணப்படும் பசுமையும் மனதை ஈர்க்கிறது.
சதி தேவி விழுந்து உயிரை விட்டதாக நம்பப்படும் யாக குண்டம் ஒன்றும் காணப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் ஆதிசங்கரர், கபில முனி ஆகியோரின் உருவங்கள் சுவரோடு ஒட்டிய மண்டபங்களில் காணப்படுகின்றன.
வேண்டுதலுக்கு வஸ்திரம்: கோயில் வளாகத்துக்கு வெளியே உள்ள மைதானம் போன்ற இடத்தில் மரம் ஒன்று காணப்படுகிறது. அதன் நடுவே கையில் சூலத்துடன் தலைவிரி கோலமாகக் கோபாவேசத்துடன் உள்ள சிவபெருமானின் உருவம் உள்ளது. அந்த மரத்தைச் சுற்றிலும் பிரம்மாண்ட இரும்பு வளையங்கள் வட்ட வடிவில் காணப்பட, அவற்றில் சின்ன சின்ன சிவப்பு வண்ணத் துணிகள் பக்தர்களால் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் சிவபெருமானை வேண்டியபடி ஒரு பிரார்த்தனையோடு கட்டிய வஸ்திரங்கள் அவை.
சந்நிதிக்குள் நுழைவதற்கு முன்பாக வாயிலுக்கு மேலே பிரம்மாண்ட தோற்றத்தில் கபில முனிவரின் உருவத்தைக் காணமுடிகிறது. சிவலிங் கத்துக்கு எதிர்ப்புறம் பிரம்மாண்டமான வெள்ளை நிற நந்தி. கூர்மம் (ஆமை) ஒன்றும் சிறிய அளவில் காணப்படுகிறது.
பிரகாரத்தில் பிரகதீஸ்வர் மகாதேவி என்கிற அம்மன் வடிவத்துக்குத் தனி சந்நிதி. சற்றுத் தள்ளி தனியாக உள்ள மண்டபத்தில் பலவிதப் பெண் தெய்வங்கள் சிறு சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். ஆலயத்தின் மற்றொரு புறத்தில் அனுமன் காணப்படுகிறார். செந்தூர வண்ணத்தில் சிரிப்புடன் ஆசி வழங்குகிறார். இந்தக் கோயிலுக்குச் செல்பவர்கள் அருகில் உள்ள அனுமன் ஆலயம், தசம் வித்யா ஆலயம் ஆகியவற்றுக்கும் செல்வது வழக்கம்.
அமைவிடம்: உலகின் மிகத் தொன்மையான நகரங்களில் ஒன்று ஹரித்வார். முன்பு மாயாபுரி என்கிற பெயரில் இந்த நகரம் அறியப்பட்டது. தேவ பூமி எனப்படும் ஹரித்வாரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கங்கல் என்னும் சிறு நகரத்தில் உள்ளது தட்சேஸ்வர் மகாதேவ் ஆலயம் என்றும் அழைக்கப்படும் தட்சப் பிரஜாபதி ஆலயம்.
- aruncharanya@gmail.com