

சோழ நாட்டில் சீர்காழியில் சிவபாத இருதயர், பகவதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் திருஞானசம்பந்தர். அம்பிகையின் ஞானப்பால் ஊட்டுவிக்கப்பெற்றார். ‘தோடுடையசெவியன்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.
‘மடையில் வாளை’ என்னும் பதிகம் பாடித் திருக்கோலக்காவில் பொற்றாளம் (தங்கத்தால் செய்யப்பட்ட தாளம்) பெற்றார். திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லிமழவன் என்னும் குறுநில மன்னனின் மகளைப் பற்றியிருந்த முயலக நோயைத் தீர்த்தார். ‘அவ்வினைக்கு இவ்வினையாம்’ எனத் தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் பாடி, கொடிமாடச் செங்குன்றூர் என்னும் தலத்தில், அடியவர்களுக்கு வந்த நளிர்சுர நோயைப் போக்கியருளினார்.
திருநெல்வாயில் அரத்துறையில் இறைவனின் அருளால் முத்துச் சிவிகையும், திருப்பட்டீச்சுரத்தில் முத்துப் பந்தரும் பெற்றார். ‘இடரினும் தளரினும்’ என்னும் பதிகம் பாடி திருவாவடுதுறையில் தம் தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டு உலவாப் பொற்கிழி அளிக்கப்பெற்றார்.
தருமபுரம் என்னும் தலத்தில் ‘மாதர்மடப்பிடி’ எனத் தொடங்கும் பதிகம் பாடினார். திருமருகலில் அரவுதீண்டி இறந்த வணிகனை ‘சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்’ எனத் தொடங்கும் பதிகம் பாடி உயிர் பெற்று எழச் செய்தார்.
திருவீழிமிழலையில் இறைவன்பாற் படிக்காசு பெற்றார். பஞ்சத்தால் வருந்திய மக்களுக்கு நாள்தோறும் இருவேளையும் உணவளித்துப் பஞ்சம் போக்கினார்.
குலச்சிறையார், மங்கையர்க்கரசியார் என்னும் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பாண்டிய நாடு சென்றார். அப்போது ‘நாளும் கோளும் நலமாக இல்லை’ என்று அப்பர் தடுக்க, ‘வேயுறு தோளிபங்கன்’ என்னும் கோளறு பதிகம் பாடினார். அனல் வாதமும் புனல் வாதமும் புரிந்து, சமணர்களை வென்றார். ‘மந்திரமாவது நீறு’ என்னும் திருநீற்றுப் பதிகம் பாடி, பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்து அவனது உடலின் கூனையும் உள்ளத்தின் கூனையும் போக்கி ‘நின்ற சீர் நெடுமாறன்’ என ஆக்கினார்.
திருமயிலையில் ‘மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை’ என்னும் பதிகம் பாடி, பாம்பு கடித்து இறந்த சிவநேசரின் மகளை உயிர்பெற்று எழச்செய்து, எலும்பைப் பெண்ணாக்குதல் அல்லது ‘அங்கம் பூம்பாவையாக்குதல்’ எனும் அற்புதம் நிகழ்த்தினார்.
வைகாசி மூல நன்னாளில் இறைவன் திருவருள் ஒளியில் கலந்தார். திருஞானசம்பந்தர், ‘மூல இலக்கியம்’ என்று சேக்கிழார் போற்றும் பற்பல அரிய திருப்பதிகங்களைப் பாடியுள்ளார். அவை அனைத்தும் சைவத் திருமுறைகளின் வரிசையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைக்கப்பெற்றுள்ளன. திருஞானசம்பந்தரின் குரு பூஜை ஜூன் 5 அன்று விமரிசையாக அனுசரிக்கப்பட்டது.