

சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய பெருமாளே. - திருப்புகழ்.
பரம்பொருள் என்பது என்ன? - இந்தக் கேள்வி அனைவருடைய உள்ளத்திலும் என்றேனும் ஒருநாள் எழுந்திருக்கும். யார் பரம்பொருள் என்கிற குழப்பமும் இருக்கும்.
“வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை யாண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே”
என்று அவனே பரம் பொருள் என்று உணர்த்துகிறார் அருணகிரியார். அந்தப் பரம்பொருளாக இருக்கிறான் திருப்போரூர் முருகன்.
திருப்போரூர் தலம்: முருகன் மூன்று இடங்களில் அசுரர்களுடன் போர் புரிந்ததாகக் கந்தபுராணம் குறிக்கிறது. திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர். திருப்போரூரில் ஆகாய மார்க்கமாகப் போரிட்டு, தாரகாசுரனை வென்றதாகக் கூறப்படுகிறது. எனவே ‘சமராபுரி’ என்றும் அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகள் இத்தலம் கவனிப்பாரற்று மண்ணில் புதையுண்டு இருந்து, பின் மதுரை சிதம்பரம் சுவாமிகள் கனவில், முருகன் சென்று தன் இருப்பிடத்தை உரைக்க, அவராலேயே திருப்போரூர் திருக்கோயில் அமைந்தது என்று கூறுகிறார்கள்.
கந்தசஷ்டி கவசத்தில் சமராபுரி வாழ் சண்முகத்தரசே என்று இத்தல முருகனைப் போற்றுகிறார் பாலன் தேவராயன் சுவாமிகள். இங்கு முருகன் கந்தசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இவர் சுயம்புவாகத் தோன்றியவர்.
அருணகிரியாரின் விண்ணப்பம்
‘அனுத்தே னேர்மொழி யாலே மாமய
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
லடுத்தே தூதுகள் நூறா றானதும் ..... விடுவார்கள்’
- என்று மாதர்கள் மேல் கொண்ட மையலையும் அவர்கள் விரிக்கும் வலையில் தான் வீழ்ந்து விடாமல் இருக்கவும் அருள் புரிவாய் என்னும் அருணகிரிநாதர், இப்பாடலில் கஜேந்தர மோட்சம் பற்றிக் கூறுகிறார்.
‘மலர்த்தே னோடையி லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை
மனத்தா லேவிய மாமா லானவர் ... மருகோனே’
- என்று முருகனை விளிக்கிறார். திருப்போரூர் முருகன் அழைத்ததும் ஓடி வருவான். நாம் செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்து, நம்மைக் கடைத்தேற்ற அவனால் மட்டுமே முடியும் என்று ‘இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி அல்லேன்’ என்கிற பாடலில் சிதம்பரம் சுவாமிகள் ‘உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்’ என்று திருப்போரூர் தலத்தைக் குறிக்கிறார்.
முருகனையே நினைந்து வணங்கினால் உயரலாம் என்றே அருணகிரியாரும் கூறுகிறார்.
மனதினை இறைவன்பால் வைத்து,
மனதினை உன்னில் ஊன்றி வாழ்வுதாழ் வுற்ற போதும்
மனநிலை சாய்ந்திடாமல் வாய்த்ததில் திருப்தியுற்று
வினையினை யெல்லாம் உன்பால் விட்டொரு பற்று மின்றி
இனிது வாழ்ந்திட வெனக்குன் இன்னருள் செய்குவாயே
- என்றே நம் பிரார்த்தனைகள் இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
ஓம்கார வடிவக் கோயில்: கந்தசுவாமி கோயில் சுற்றுச் சுவரில் சேவலுடன் இருக்கும் ‘குக்குடாப்தஜர்’ என்கிற முருகனின் ஒரு வடிவை வேண்டினால் வாழ்க்கையில் ஏற்படும் தாமதங்கள் விலகும் என்கிறார்கள். ஓம்கார வடிவில் அமைந்த இக்கோயில் முருகனைத் தொழுது அருணகிரியார் நான்கு திருப்புகழ் பாடியுள்ளார்.
கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சிவாயமு மேயா
யகம்படு கண்டியூர் வருசாமீக டம்பணி மணிமார்பா
- என்று கந்தசுவாமியைப் பாடுகிறார்.
திருமாலின் மருகோன்: திருப்புகழில் அருணகிரியார் முருகனைப் பல்வேறு விதமாகப் போற்றித் துதிக்கிறார். ஆணவ இருளை நீக்கும் சூரியன், நாகாபரணம் அணிந்த சிவனின் குமரன், திருமாலின் மருகோன், பூரணி, குணகலாநிதி, நாரணி பெற்ற மைந்தனே, குமரேசனே, சரவணன், வள்ளியின் மீது ஆசை கொண்ட மணி, வெட்சி மாலை அணிந்தவன், அம்பிகை தந்தருளியவன் என்றெல்லாம் துதிக்கிறார்.
‘காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
கார ணாகரு ணாகர ... முருகோனே’ என்று முருகனே சம்பந்தராக வந்து அவதரித்தான் என்றும் கூறுகிறார்.
‘போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மாநகர் மேவிய பெருமானே’ என்கிற பாடலில் பிரம்மன், திருமால், உமையம்மையைப் பாதியில் வைத்த ஈசன் என்று மூவரும் வந்து தொழும் திருப்போரூர் வாழும் முருகன் என்று சரவணப் பெருமானின் பெருமையைப் பாடுகிறார்.
எங்கிருந்தாலும் கந்தவேள் இருக்கும் இடம் கருணா சாகரம் என்றாலும், ஒவ்வொரு இடத்திலும் அவனது அற்புதம் அளவிடற்கரியது. அந்த வகையில் திருப்போரூர் தலம் திருவருள் அனைத்தையும் தரவல்லது. கந்தசுவாமி என்று அழைத்தால் கவசமாய் வந்து நிற்பான்.
(புகழ் ஓங்கும்)