

முன்பெல்லாம் விசேஷ நாட்களில் மட்டும்தான் நமது வீடுகளில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை சமைப்பார்கள். அதனால் எப்போதாவது கிடைக்கும் பண்டமாக இருந்தன. ஆனால், கால சூழல் காரணமாக, இப்போது, இட்லியும், தோசையும் பல வீடுகளில் தினசரி உணவாக மாறிவிட்டது. அதேபோல் வடையும் இப்போது அடிக்கடி சாப்பிடுகின்றனர்.
இந்த உணவு வகைகளுக்கு அடிப்படையாக இருப்பது உளுந்து. வெள்ளை உளுந்தைவிட கருப்பு உளுந்தில் செய்யப்படும் இட்லி, வடை வகைகள் கூடுதல் சுவையுடன் திகழ்கின்றன. குறிப்பாக, கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும்அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் உளுந்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் விளையும் உளுந்தை விட சில தனித்துவமான சிறப்புகளைக் கொண்டுள்ளது.
சிதம்பரம் பகுதிகளில் விளையும் கருப்பு உளுந்து அதிகச் சுவையைத் தருகிறது. மற்ற உளுந்து வகைகளைவிட, சிதம்பரம் உளுந்து நல்ல திரட்சியாக இருப்பதால் அதிக அளவு மாவு கிடைக்கிறது. இதனால் தாய்மார்கள் மிகவும் விரும்பி வாங்குகின்றனர்.