

விவசாயம் இன்று ஒரு குறுக்குச் சாலையில் நிற்கிறது. ஒருபுறம், பாரம்பரிய முறைகளின் மீதான நம்பிக்கை; மறுபுறம், ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் சார்ந்த நவீன வேளாண்மை. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே, நம்முடைய மண் ஒரு ஆபத்தான நிலையை நோக்கி நகர்கிறது.
மண்ணின் நிலை
உலகம் முழுவதும், மண்ணின் ஆரோக்கியம் என்பது கேள்விக்குரியதாக ஆகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும், யுனெஸ்கோவும், “தற்போதைய வேளாண்மை மற்றும் தொழில்துறை நடைமுறைகள் தொடர்ந்தால், 2050க்குள் பூமியின் 90 சதவீதம் நிலப்பரப்பு சீரழியும் நிலைக்குத் தள்ளப்படலாம்.
இது உணவுப் பாதுகாப்பு, நீரின் தரம் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவின் நிலைமையும் இதற்கு விதிவிலக்கல்ல.
சமீபத்திய ஜூன் 2026 ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலம் சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது. மண்ணில் நைட்ரஜனின் அளவு 5 சதவீதத்துக்கும் குறைவாகவும், மண்ணின் கரிம கார்பன் (Soil Organic Carbon) அளவு 0.54 சதவீதத்துக்குக் கீழேயும் சரிந்துவிட்டது.
இவை விளைச்சலை மட்டுமின்றி, மண்ணின், மனிதர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கின்றன. இவை தவிர, கன உலோக மாசுபாடு (Heavy Metal Contamination) சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பயிர்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பெரும் உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது.