

உள்படம்: ஐயப்பன்
பாலாற்று பாசனத்தில் செழித்த வேலூர் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை விவசாயம் ஒருகாலத்தில் தழைத்தோங்கியது பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர் பாதிப்பால் இன்று விவசாயத்தை கைவிட்டு செல்லும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்றைய விவசாயிகளுக்கு மத்தியில் கிடைக்கின்ற நீராதாரத்தை பயன்படுத்தி கேழ்வரகு பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டி மாநில அளவிலான விருது பெற்று நம்பிக்கை விவசாயியாக மாறியுள்ளார் ஐயப்பன். வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பெரியகம்பந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (42). மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் கேழ்வரகு பயிரில் அதிக விளைச்சலை ஈட்டி மூன்றாவது பரிசு பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பாராட்டுச் சான்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. “விவசாயம்தான் எனது குலத்தொழில்” என்கிறார் ஐயப்பன். தனது விவசாய சாகுபடி குறித்து அவர் மேலும் கூறியதாவது: தந்தைக்குப் பிறகு நானும் விவசாயம் செய்து வருகிறேன். பாரம்பரிய முறையில்தான் விவசாயம் செய்து வருகிறேன். இதற்காக, எங்கும் பயிற்சி எதுவும் எடுக்கவில்லை.