

நெல் சாகுபடி செய்யும் வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்துவது என்பது இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதற்காகப் பெரும் தொகையைச் செலவிட்டும் பலன் கிடைக்காமல் பலரும் தவித்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கண்ணந்தகுடி கீழையூரைச் சேர்ந்த விவசாயி தாமரைகண்ணன் (43), கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனது வயலில் களைகளைக் குறைத்து அதனைக் கட்டுபடுத்தி, களை மேலாண்மையில் முன்னோடியாகத் திகழ்கிறார்..
தொழில்நுட்பக் கல்வி பயின்ற தாமரைக்கண்ணன், தொடக்கத்தில் வருமானம் ஈட்டுவதற்காகச் சிங்கப்பூருக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் வணிகம் செய்தார். அங்குப் பொருளாதார வசதி கிடைத்தாலும், மனநிறைவான வாழ்க்கை அமையவில்லை.
இதையடுத்துத் தனது சொந்த ஊருக்குத் திரும்பியவர், தந்தை செய்து வந்த விவசாயத்தைத் தொடர முடிவெடுத்தார். தங்களது குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 18 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய நெல் சாகுபடியையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்.