

இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதற்கு பசுமை புரட்சிதான் பிரதான காரணம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. உணவுப் பொருட்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருந்த நிலை மாறி, இன்று பல விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாடு தன்னிறைவு பெற்றுள்ளதை யாரும் மறுக்க இயலாது.
எனினும், இந்தியாவில் விவசாயத் துறை வளர்ந்திருந்தாலும், இந்திய விவசாயியின் வாழ்க்கையில் அந்த வளர்ச்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள் சார்ந்த வணிகம் இந்தியாவில் பன்மடங்கு வளர்ந்துள்ளது. ஆனால், உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து தரும் விவசாயியின் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
மாறாக, சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களுக்கு விவசாயி செலவழிக்கும் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே உள்ளது. இந்த காரணங்களால், வளர்ச்சியின் பலன்கள் விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையிலான நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இந்தியாவில் எப்போது சாத்தியமாகும் என்பது பெரும் கவலைக்குரிய விசயமாக இங்கு விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பசுமைப் புரட்சியால் இந்திய விவசாய சாகுபடி முறைகளில் ரசாயனங்களின் பயன்பாடு தொடங்கியது. இந்தப் பயன்பாடு என்பது அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், மலேசியா உள்ளிட்ட சிறிய நாடுகளிலும் கூட குறிப்பிட்ட வரையறைகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.