

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1879ம் ஆண்டு 10 ஆயிரத்து 117 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டிருந்தது. மாவட்டத்தில் தேயிலை அறிமுகமான பின்னர் விவசாயிகள் காபியை விட்டு தேயிலை பயிரிட தொடங்கினர். கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களின் நடுவே ஊடுபயிராக காபி மற்றும் மிளகு ஆகியவை பயிரிடப்பட்டது.
தேயிலைக்கு நிலையான விலை கிடைக்காத சூழலில், இந்த ஊடு பயிர்கள் மூலமாக விவசாயிகள் ஓரளவுக்கு வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், ஊடுபயிர்களாக இருந்த காபி மற்றும் குருமிளகு மீண்டும் முக்கிய பயிர்களாக மாறியுள்ளன.
இந்தியாவில் ரோபஸ்டா மற்றும் அரேபிகா என இரண்டு ரக காபி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு காபி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், அரேபிகா ரக காபி தூளுக்கு கிராக்கி அதிகம்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பல விவசாயிகள் இப்போது தேயிலை செடிகளை நீக்கி விட்டு காபிவிவசாயத்துக்கு மாறியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், கோத்தகிரி பகுதிகளில் சுமார் 8,333 ஏக்கர் அளவுக்கு காபி சாகுபடி செய்யப்படுகிறது.
கீழ்கோத்தகிரி செம்மனாரை கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடியினர், காபி உற்பத்தியில் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காபி சாகுபடி செய்து கொட்டைகளை தனியாருக்கு விற்று சொற்ப பணம் பெற்று வந்த நிலையில், தாங்களே காபி கொட்டைகளை அரைத்து, தூளாக்கி, விற்பனை செய்து தொழில் முனைவோராக மாறி வருகின்றனர்.