

அமைச்சரிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழ் பெறும் சந்திரகுமார்.
விவசாயத்தில் ஈடுபட்ட முதல் ஆண்டிலேயே கரும்பு சாகுபடியில் ஏக்கருக்கு 126 டன் மகசூல் எடுத்து இளம் விவசாயி ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். சிவகங்கை அருகேயுள்ள தமறாக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கா.சந்திரகுமார் (33). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிவில் பொறியியல் பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார்.
இவரது சகோதரர் மதிவாணன் 25 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு சாகுபடி செய்து வருகிறார். இதனால் சந்திரகுமாருக்கும் விவசாயத்தில் ஈடுபாடு இருந்து வந்தது. எனினும், குடும்பத்தினர் வற்புறுத்தியதன் காரணமாக விவசாயத்தில் ஈடுபடாமல், வெளிநாட்டுக்கு சம்பாதிக்கச் சென்றுவிட்டார். வெளிநாட்டு வாழ்க்கையில் அவருக்கு திருப்தியில்லை. இதனால் சொந்த ஊருக்கே திரும்பிய அவர், கரும்பு விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்த கரும்பு விளைச்சல் போட்டியில் பங்கேற்க தனது பெயரை பதிவு செய்தார். அவர், 5 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்தார். பொதுவாக அதிக விளைச்சல் உள்ள கரும்பு வயல்களில் ஏக்கருக்கு 100 டன் வரை மகசூல் கிடைக்கும். இந்நிலையில் சந்திரகுமார் இந்த ஆண்டு ஏக்கருக்கு 126 டன் மகசூல் எடுத்து சாதனை படைத்ததுடன், கரும்பு விளைச்சல் போட்டியில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரூ.2.5 லட்சம் பரிசுத் தொகையை வழங்கி, சந்திரகுமாரைப் பாராட்டினார். இந்த சாதனை குறித்து விவசாயி சந்திரகுமார் கூறியதாவது: கடந்த ஆண்டு நானும், எனது சகோதரர் மதிவாணனும் மொத்தம் 18 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்தோம்.