

தமிழகத்தின் ஒட்டுமொத்த வேளாண்மைத் திறனும் பொருளாதார வளர்ச்சியும் மண்ணின் ஆரோக்கியத்தைச் சார்ந்தே அமைந்துள்ளன. நம் மாநிலத்தின் நிலப்பரப்பில் சுமார் 61% வரை செம்மண், கரிசல் மண் (16%) மற்றும் வண்டல் மண் (20%) என்ற வகைப்பாட்டில் காணப்படுகின்றன.
மண் வளத்தின் இன்றியமையாமை பெருகி வரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வளமான மண் அத்தியாவசியமானது. உற்பத்தி செலவை குறைத்து அதிக லாபம் பெறுவதற்கு முறையான மண்வளமும், நல்ல விதைகளும், தொடர் பராமரிப்பும் முக்கியம்.
அனைத்து காலங்களிலும் மண்ணின் வளம் பாதுகாக்கும் முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சாகுபடிக்கு முன்பும், தோட்டக்கலை பயிர்களுக்கும் மண்ணுக்கேற்ற அடி உரம் இடுவது முக்கியம்.
பயிர்கள் செழித்து வளர்ந்து அதிக மகசூல் தர வேண்டுமானால், பேரூட்ட சத்துகளுடன் நுண்ணூட்டச் சத்துகளும் சமச்சீராக இருக்க வேண்டும். மண்ணில் கரிமச் சத்துக்கள் (Organic Matter) போதுமான அளவு இருக்கும்போது, கடுமையான வறட்சி காலங்களிலும் பயிர்களுக்குத் தேவையான சத்து மற்றும் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் மண்ணுக்குக் கிடைக்கிறது.
தற்போதைய சவால்கள்
தமிழக விளைநிலங்களில் சத்துக் குறைபாடு அதிகரித்து வருவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான நிலங்களில் சராசரியாக 90% தழைச்சத்து குறைபாடும் 40 சதவீதம் மணிச்சத்து, 35% சாம்பல் சத்து, துத்தநாக சத்து 45% கந்தகம் 50% மாங்கனிசு இரும்பு துத்தநாகம் 30% மற்றும் அங்கக கரிமம் 60% வயல்களில் பற்றாக்குறையாக உள்ளன.