

2022இல் வேலூர் காந்தி நகரில் தொடங்கப்பட்ட மக்கள் நலச் சந்தை, இன்று வேலூர் மட்டுமின்றி, சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நுகர்வோரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயற்கை வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விரும்பும் நுகர்வோருக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டு வரும் மக்கள் நலச் சந்தை, இப்போது வேலூர் காந்தி நகர், ஆம்பூர் நகரம் மற்றும் மேல்வெள்ளம் பகுதிகளில் மாதச் சந்தையாகவும், ஜங்கலாபுரம் மற்றும் சோளிங்கர் பகுதிகளில் வாரச் சந்தையாகவும் நடைபெற்று வருகிறது.
லாப நோக்கின்றி மக்களுக்கு நஞ்சில்லா உணவளிக்கும் இலட்சிய பணி செய்வது, வியாபாரத்தன்மைகளும் வியாபாரிகளும் இல்லாத மக்களை நேசிப்பதை மட்டும் முதன்மையாகக் கொண்ட சந்தை, சமூக நலன் விரும்பும் விவசாயிகளையும் நுகர்வோர்களையும் கொண்டது, தங்கள் விளைபொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்பு, விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பெருமை சேர்ப்பது, பூமியின் சுற்றுச்சூழல் கெடுவதைத் தடுத்து, சூழல் காக்கும் பேரியக்கத்தின் ஓர் அங்கமாக செயல்படுவது, விவசாயிகளே நுகர்வோர்களாகவும் தங்களுக்குள் விளைபொருட்களை மாற்றி விற்பனை செய்து கொள்வது, விற்கும் இடமாக மட்டுமல்லாமல் கற்கும் களமாகவும் பயன்படுத்துதல் மற்றும் அறிவியலும் தொழில்நுட்பமும் கொடுத்துள்ள அறிவினை சந்தையுடன் இணைத்து செயலாற்றி, விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயன்களை விளைவிப்பது என பல உன்னதமான நோக்கங்களுக்காக இந்த சந்தை செயல்பட்டு வருகிறது.
வழக்கமான வார மற்றும் மாதச் சந்தை மட்டுமின்றி, வேலூரில் உள்ள விஐடி கல்வி வளாகம், இங்கு நடைபெறும் அரசு கண்காட்சிகள், ஆற்காடு அரிசி திருவிழா போன்ற சிறப்பு சந்தைகளிலும் மக்கள் நலச் சந்தை பங்கேற்கிறது. தங்கள் விளைபொருட்களை விற்பதற்காக இங்கு வரும் விவசாயிகளிடம் இருந்து சந்தைக்கான கட்டணம் என எதுவும் வசூல் செய்யப்படுவது இல்லை.