எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரம் பகுதியில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் தொழிலாளர்கள்.
சர்க்கரையை துரத்தும் அபூர்வ மருந்து: எட்டயபுரத்தில் எகிறும் பனங்கிழங்கு விளைச்சல்!
தமிழ்நாட்டின் மாநில மரம் என்ற அந்தஸ்து கொண்டது பனைமரம். வாழைபோல் தன்னை முழுமையாக மனிதப் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மரம். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை ஆரோக்கியமான உணவுப் பொருட்களாக விளங்குகின்றன. ஓலை, பனங்கட்டைகள் ஆகியவை வீடு கட்டும் பொருட்களாக பயன்படுகின்றன.
இவற்றில் நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாகிறது. பனம் பழம் காய்ந்து அதிலிருந்து கிடைக்கும் பனை விதைகளை மணற்பாங்கான பகுதிகளில் விதைத்தால் பனங்கிழங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை வழிபாட்டில், தானியங்கள், நெல் மணிகள், காய்கறிகளுடன், பனங்கிழங்களும் பிரதானமாக இடம்பெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியான எட்டயபுரம் அருகே தாப்பாத்தி, அயன் வடமலாபுரம் மற்றும் வைப்பாற்று கரையோரப் பகுதியில் சுமார் 2 லட்சம் பனை மரங்கள் உள்ளன. இதனை நம்பி சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி கடைசி முதல் ஜூலை வரையிலும் பதநீர் உற்பத்தி காலமாகும்.
