

கல்லுக்குடியிருப்பு கிராமத்தில் விவசாயி சிதம்பரபாண்டியனின் நர்சரி.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அடர்ந்த யூகலிப்டஸ் காட்டுக்குள் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது ‘கல்லுக்குடியிருப்பு’ எனும் கிராமம். நிலத்தை உழுது லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அளவுக்கு மண்வளமோ, போதிய நீர்வளமோ இங்கு இல்லை.
விவசாயக் கூலித் தொழிலையும், கூடை முடைதல் போன்ற கைத்தொழிலையும் மட்டுமே நம்பியிருந்த இக்கிராம மக்கள், “விடிந்தால் வேலை கிடைக்குமா?” என்ற ஏக்கத்துடனே காலத்தைக் கழித்து வந்தனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். பிற ஊர்களில் இருந்து வேலை தேடி மக்கள் இங்கு வரும் அளவுக்குப் பலரை வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்றி சாதனை படைத்துள்ளது கல்லுக்குடியிருப்பு.
கிராமத்தின் பெயரைக் கேட்டதும் இங்கு ‘கல்குவாரிகள்’ இருக்குமோ என்று எண்ணத் தேவையில்லை. கடும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கவும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் தேவையான பசுமை நாற்றங்கால்களின் மையமாகவே இக்கிராமம் உருவெடுத்துள்ளது.
இங்குள்ள வீடுகள்தோறும் உயிர்வேலி அமைத்து, நர்சரி தொழிலைச் செய்து வருகின்றனர். அனைத்து வகையான மரக்கன்றுகள், அழகு தரும் பூஞ்செடிகள் மற்றும் அரிய மூலிகைச் செடிகள் என கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து, அவற்றைச் சந்தைப்படுத்தி கணிசமான லாபத்தையும் ஈட்டி வருகின்றனர்.