கிராம மக்கள் வாழ்வில் இனிக்கும் வேப்பங்கொட்டை

வேப்பங்கொட்டைகளைச் சேகரிக்கும் கிராம மக்கள்

வேப்பங்கொட்டைகளைச் சேகரிக்கும் கிராம மக்கள்

Updated on
2 min read

மண்ணில் வேரூன்றி நிற்கும் மரங்களில் மனித குலத்துக்கு இயற்கை அளித்த ஒப்பற்ற அமுதசுரபி வேப்பமரம். பனைமரத்தைப் போலவே தன் ஒவ்வொரு அங்கத்தாலும் மானுட சமூகத்துக்கு அரிய நன்மைகளை அள்ளித் தரும் இந்த விருட்சம், இயற்கையின் நோய் எதிர்ப்பு அரணாகத் திகழ்கிறது.

நவீன விவசாயத்தில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயிர்களை நச்சு மயமாக்கி, மனித ஆரோக்கியத்துக்கும் நிலத்தின் வளத்துக்கும் பெருங்கேடு விளைவித்து வரும் சூழலில், வேப்பமரம் ஒரு பசுமை அரணாக உருவெடுத்துள்ளது.

வேளாண் விஞ்ஞானிகளின் வழிகாட்டலின்படி, பயிர்களைச் சூழும் பூச்சிகளையும் வண்டுகளையும் இயற்கையான முறையில் கட்டுப்படுத்த வேப்ப மரத்தின் விதைகளான வேப்பங்கொட்டைகள் பெருமளவில் பயன்படுகின்றன. இவற்றிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இயற்கை பூச்சிவிரட்டிகள், நச்சுத்தன்மையற்ற உரங்களாகவும் பயிர்க்காப்பு மருந்தாகவும் மண்ணுக்குப் புத்துயிர் ஊட்டுகின்றன.

ஆண்டுதோறும் மே மாதத்தின் வெயிலில் வேப்பமரத்தில் பூக்கள் அரும்பி, காயாகி, கோடையில் கனிந்து நிலத்தில் உதிர்கின்றன. இந்தக் காலகட்டத்தில் கிராமப்புற மக்கள் அதிகாலையிலேயே திரண்டு சென்று உதிர்ந்த வேப்பங்கொட்டைகளைச் சேகரிக்கும் எழிலார்ந்த காட்சிகளைக் காண முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு 130 ரூபாய் வரை உச்சத்தைத் தொட்ட வேப்பங்கொட்டை, கடந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் 65 ரூபாயாகக் குறைந்த போதிலும், நடப்பு சீசனின் தொடக்கத்தில் 50 ரூபாய்க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in