

காலநிலை மாற்றமும் உணவுப் பாதுகாப்பும் உலகம் இன்று எதிர்கொள்ளும் இரு பெரும் சவால்கள். இவை இரண்டுக்கும் மையப் புள்ளியாக விளங்குவது விவசாயமும், நாளுக்கு நாள் குன்றிவரும் மண்ணின் வளமுமே ஆகும். இச்சூழலில் உலகச் சமூகம் மீண்டும் இயற்கை வேளாண்மையை நோக்கித் திரும்புகிறது.
ஆனால், இத்துறை சார்ந்த உண்மைகளை விடத் தவறான நம்பிக்கைகளே அதிகம் உலா வருகின்றன. உணர்ச்சிப் பெருக்கைத் தாண்டி, உண்மைநிலையைக் கண்டறிய வேண்டிய தருணம் இது.
இயற்கை வேளாண்மை என்பது கடந்த காலத்தை நோக்கியப் பின்னோக்கியப் பயணமன்று; மாறாக, எதிர்காலத்தைப் பாதுகாக்கும் தொலைநோக்கு முயற்சி. மண்ணில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள், மண்புழுக்கள், பூச்சிகள், மரங்கள், கால்நடைகள் மற்றும் மனிதன் ஆகிய அனைத்தும் பிணைந்த ஒற்றைப் பெருமண்டலம் என்ற புரிதலே இதன் அடிப்படை.
இன்று உலகளவில் பரவலாகப் பேசப்படும் மண் வளம், புத்தாக்க வேளாண்மை, கரியமில விவசாயம், இயற்கை சார்ந்த தீர்வுகள் போன்ற நவீனக் கருத்துகளின் வேர்கள் அனைத்துமே இயற்கை சார்ந்த வேளாண் முறைகளிலேயே ஊன்றப்பட்டுள்ளன.
விளைச்சல் பற்றிய உண்மை
இயற்கை வேளாண்மையில் விளைச்சல் கிடைக்காது என்ற கூற்றில் பகுதி உண்மையே உள்ளது. தொடர்ச்சியாக ரசாயன உரங்களைப் பயன்படுத்திய நிலம் இயற்கை முறைக்கு மாறும்போது, மண்ணின் உயிரியல் சமநிலை மீட்சியடையச் சிறிது காலம் எடுக்கும்.