

சீன வேளாண் விஞ்ஞானி யுவான் லாங் பிங், ‘வீரிய நெல் ரகத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர். இவர் தனது ஆய்வு மையத்தின் சோதனை வயலில் ஒரு ஹெக்டேருக்கு 19.4 டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்திருந்தார்.
பல கோடி மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ததற்காக, 2004ஆம் ஆண்டு இவருக்கு ‘உலக உணவு விருது’ (World Food Prize) வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், பீகார் மாநிலத்தின் ஒரு சாதாரண விவசாயி ஒரு ஹெக்டேருக்கு 22.4 டன் நெல் விளைவித்து, உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தினார்.
அவர் நாளந்தா மாவட்டம், தர்வேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த சுமந்த் குமார். இவர் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் (IRRI) மற்றும் மேற்கத்திய நாடுகளின் பெருநிறுவனங்கள் வைத்திருந்த மகசூல் சாதனைகளை முறியடித்தார்.
சாதனை பின்னணி
2011-2012 காலக்கட்டத்தில், தர்வேஷ்புரா கிராமத்தில் நல்ல மழை பெய்திருந்தது. சக்ரி நதிக்கரையோரம் இருந்த சுமந்த் குமாரின் வயலில் நெல் மணிகள் வழக்கத்தை விடத் திரட்சியாக இருந்தன. வழக்கமாக ஹெக்டேருக்கு 4 முதல் 5 டன் மகசூல் எடுக்கும் அவர், இம்முறை கூடுதல் விளைச்சலை எதிர்பார்த்தார். ஆனால், விளைச்சலை எடை போட்டபோது ஒரு ஹெக்டேருக்கு 22.4 டன் என்பது உறுதியானது. இது உலக சாதனையாகக் கருதப்பட்டது.