

திருவண்ணாமலை மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலைப் பகுதியில், வழக்கமான பயிர் முறைகளைத் தாண்டி, புதியதொரு வேளாண் புரட்சி அரங்கேறியுள்ளது.
வட மாநிலங்களின் குளிர்ந்த தட்பவெப்பநிலையில் மட்டுமே விளையக் கூடிய லிச்சி பழங்களை, தங்களின் அயராது உழைப்பால் அறுவடை செய்து சாதனை படைத்துள்ளனர் இப்பகுதி மலைக்கிராம விவசாயிகள். குக்கிராம விவசாயிகளால் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனை, தமிழக விவசாய மேம்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
சீனத்து வருகை
ஈரப்பதமும் மிதமான குளிர்ச்சியும் கொண்ட மிதவெப்ப மண்டலக் காலநிலையை வாழ்வாதாரமாகக் கொண்டது லிச்சி பழச்செடியாகும். சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்த சுவையான பழம், இந்தியாவில் பீகார் மாநிலத்தில் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் போன்ற வட இந்திய மாநிலங்களில் மட்டுமே இந்த சாகுபடி இருந்து வந்தது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கொடைக்கானலில் மட்டுமே இதுவரை சோதனை முறையில் பயிரிடப்பட்டு, ஓரளவு மகசூல் பெறப்பட்டிருந்தது.
ஆட்சியரின் தொலைநோக்குப் பார்வை
லிச்சி பழ பயிர்ச் சாகுபடிக்கு ஏற்ற இயல்பான காலநிலை ஜவ்வாதுமலையில் இல்லை என்ற போதிலும், இங்குள்ள தட்பவெப்ப மாற்றங்களைப் பயன்படுத்தி புதியதொரு முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டார் அன்றைய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.