

1986ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மண்ணில், இயற்கை வேளாண்மையின் தந்தை நம்மாழ்வார் கொழுஞ்சி சூழலியல் பண்ணையைத் தொடங்கியபோது, அது ஒரு புரட்சியின் தொடக்கமாக இருந்தது.
பூச்சி மருந்துகளும், ரசாயன உரங்களுமற்ற, மண்ணின் இயற்கை சமநிலைக்கு மதிப்பளிக்கும் அந்தக் கருத்தியல், கடந்த 40 ஆண்டுகளாகப் பல விவசாயிகளின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. எனினும், இன்றைய யதார்த்தத்தைப் பார்க்கும்போது, இந்தக் கருத்தியல் அதன் தற்போதைய வடிவத்தில் நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது.
பல விவசாயிகளிடம் இது வெறுமனே பேச்சு அளவில் மட்டுமே இருந்து வருகிறது; செயல்முறையில் இது சாத்தியமா என்ற தயக்க நிலையிலேயே விவசாயிகளில் பலரும் இருக்கின்றனர். இது தவிர, காலநிலை மாற்றக் காரணிகள், இன்றைய இயற்கை வேளாண்மை அணுகுமுறைகளை மிகவும் கடினமாக்கிக் கொண்டிருக்கின்றன.
காலநிலை எச்சரிக்கை
காலநிலை முன்னறிவிப்புகள் நமக்குத் தெளிவான எச்சரிக்கையை அளிக்கின்றன. 2050க்குள் தமிழ்நாட்டின் நெல் விளைச்சல் 20% வரையிலும், மக்காச்சோளம் விளைச்சல் 23% வரையிலும் குறையும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மழை பொய்த்து, நிலத்தடி நீர் வீழ்ச்சியடைந்து, வறட்சி நீண்டு கொண்டே செல்லும் இந்தப் புதிய உலகில், முழுக்க முழுக்க உழைப்பையும் பாரம்பரிய அறிவையும் மட்டும் நம்பியிருக்கும் முறை, கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைட்டின் அளவு 290 பிபிஎம்மாக இருந்தது. இன்று அது 430 பிபிஎம்மைத் தாண்டியுள்ளது. 100 ஆண்டுகளில் 60% உயர்ந்த இந்த வெப்பம், நாம் இயற்கை வேளாண்மையைப் பற்றிப் பேசும் சூழலையே மாற்றிவிட்டது.