

இயற்கை விவசாயத் தோட்டத்தில் பார்த்தசாரதி (நடுவில் இருப்பவர்). உடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயலட்சுமி, ‘அட்மா' திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன்.
நீலகிரி மாவட்டத்தை 5 ஆண்டுகளுக்குள் முழுமையான இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.50 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்தல் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த இலக்கை அடைய, மண்புழு உரம், பஞ்சகவ்யா போன்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்புக்கு விவசாயிகளுக்கு உதவுதல்; விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளித்து ‘அங்ககச் சான்றிதழ்’ வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக ஆர்வமுள்ள விவசாயிகள், படிப்பு முடிந்து வேலை தேடும் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கும் ஊட்டி உழவர் பயிற்சி நிலையம் மூலம் இயற்கை வேளாண்மை தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை சாகுபடியாளர் என்ற இந்த பயிற்சி இதுவரை இரண்டு கட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. மூன்றாம் கட்டப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுவரை 64 பேர் இயற்கை சாகுபடியாளர் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்கள், தங்களுக்கு பயிற்சியில் வழங்கப்பட்ட தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, தங்களது சொந்த நிலங்களில் இயற்கை வேளாண்மையை மேற்கொண்டுள்ளனர்.