

கமுதி தாலுகா, கோரைப்பள்ளம் மிளகாய் தோட்டத்தில் விவசாயி ராமர்.
வெளிநாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்து, கமுதி இயற்கை விவசாயி ராமர் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். வறட்சி மாவட்டம் என்றும், வானம் பார்த்த பூமி என்றும் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு சாதித்து வருகின்றனர்.
குறிப்பாக இவர்கள் மிளகாய், தக்காளி, வெங்காயம், வாழை, மக்காச்சோளம், எலுமிச்சை, கொய்யா, நெல்லி என பல்வேறு பயிர்களை செய்து அசத்தி வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த 206 விவசாயிகள் ஒருங்கிணைந்து, இயற்கை முறையில் சம்பா மிளகாய் உற்பத்தி செய்து, மிளகாய் வத்தலை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளனர்.
இவர்களில் முதன்மை விவசாயியாக திகழ்பவர் கமுதி தாலுகா, ராமசாமிபட்டி ஊராட்சி, கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் (60). இவர் கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை உரங்களை பயன்படுத்தி மிளகாய், தக்காளி, வெங்காயம், வாழை, நெல் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்.
மேலும் வேளாண் துறையின் அறிவுறுத்தலின் பேரில் விதை நேர்த்தி செய்யப்பட்ட மிளகாய், பருத்தி, நெல் விதைகளை உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறார். இவரது விவசாய நிலத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் வத்தல் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.