

டாக்டர் ந.புண்ணியமூர்த்தி.
மனித குலத்துக்கு விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களே மிக முக்கியமான ஆதாரமாக திகழ்கின்றன. இந்த விவசாயத்துக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவை கால்நடைகள். விவசாயமே பிரதானமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் கால்நடை வளர்ப்பும் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது.
இந்தியாவில் ஆரம்ப காலம் தொட்டே கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கால்நடைகளும் மனித இனம் போன்றே பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. அபாயகரமான நோய் தாக்குதல்களால் கால்நடைகள் உயிரிழக்கும் தருணங்களில், அந்த இழப்பை தாங்க முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.
இந்த சூழலில்தான், மரபு வழி மருத்துவம் மூலம் கால்நடைகளைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் இறங்கினார் தஞ்சாவூரைச் சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியாளர் டாக்டர் ந.புண்ணியமூர்த்தி (68). இவரது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட கால்நடைகளுக்கான மரபு வழி மருத்துவம், இன்று உலகின் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மகத்தான பணிக்காக இந்திய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்கு அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தனது ஆராய்ச்சி அனுபவங்களை ‘நிலமும் வளமும்' வாசகர்களுக்காக அவர் பகிர்ந்து கொண்டார்.
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற நான், ‘நோயும், மருந்தியலும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றேன். படித்து முடித்ததும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினேன்.