

மக்களுக்கு நஞ்சில்லா உணவை வழங்கி, மண் வளத்தைக் காத்து, குறைந்த செலவில் நிறைவான லாபம் பெறுவதே இயற்கை விவசாயத்தின் நோக்கம். ஆனால், விற்பனையின் போது இடைத்தரகர்களால் நிர்ணயிக்கப்படும் அதிகப்படியான விலையால் நுகர்வோர் ஏமாற்றமடைந்து, விவசாயிகள் தொடர முடியாமல் போகிறது.
இதைத் தவிர்க்க, விவசாயிகள் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே நேரடியாக விற்பனையைத் தொடங்கினால், இடைத்தரகர்கள் இல்லாமல் 100% முறையான லாபத்தையும் நிலையான வளர்ச்சியையும் எட்ட முடியும். இதற்குப் பெரிய முதலீடு தேவையில்லை, முறையான திட்டமிடலும் நுகர்வோரின் நம்பிக்கையுமே போதுமானது.
திட்டமிட்ட உற்பத்தியும்
நுகர்வோருக்குத் தங்களின் பண்ணை அமைவிடம், விளைபொருட்களின் விவரம் மற்றும் தொடர்பு எண்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வழியாக முன்கூட்டியே தெரியப்படுத்தலாம்.
உதாரணமாக, கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியைச் சேர்ந்த உழவாலயம் பண்ணை விவசாயி திரு. சிவக்குமார், தான் விளைவிக்கப் போகும் பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்புகளை நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவித்து, விற்பனையை உறுதி செய்த பின்பே சாகுபடி செய்கிறார்.