

தமிழர்களின் வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்புடையது செங்காந்தள் மலர். இது தமிழ்நாட்டின் மாநில மலர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங் களில் ‘காந்தள்’ என்று போற்றப்படும் இந்த மலர், பெண்களின் விரல்களுக்கு உவமையாகக் கூறப்படுகிறது. இதன் இதழ்கள் சுடர்விட்டு எரியும் நெருப்பைப் போலத் தோன்றுவதால், 'செங்காந்தள் மலர்' என்று அழைக்கப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை இந்த மலர் பெற்றுள்ள நிலையில், மருத்துவத் துறையில் செங்காந்தள் செடியின் விதைகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. பல முக்கிய நோய்களுக்கு இந்த விதைகளிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் சர்வதேச மருந்து சந்தையில் இதற்கான தேவை எப்போதும் அதிகமாக இருக்கின்றன.
மிகவும் லாபகரமான இந்தப் பணப் பயிர், தமிழ்நாட்டில் திண்டுக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு செங்காந்தள் செடியின் விதைகள் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காவேரியம்மாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ப.மகாராஜன், இந்த ஆண்டு இரண்டரை ஏக்கர் நிலத்தில் செங்காந்தள் சாகுபடி செய்துள்ளார். “பிரச்சினை எதுவுமின்றி, செங்காந்தள் சாகுபடி நல்லபடியாக நிறைவடைந்தால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி. அதே நேரத்தில், அதற்கு முன்பு ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சாகுபடி இது” என்கிறார் அவர்.
இது குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். செங்காந்தள் சாகுபடி நிலத்தில் தண்ணீர் தேங்கக் கூடாது. அதனால் நிலத்தை நன்கு உழுது, ஐந்தரை அடி இடைவெளியில் மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். செங்காந்தள் சாகுபடிக்கு அதன் கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்க ருக்கு 450 முதல் 600 கிலோ வரை விதைக்கிழங்கு தேவைப்படும்.
இந்த ஆண்டு ஒரு கிலோ விதைக்கிழங்கு ரூ.900 என்ற விலையில் ஆந்திராவிலிருந்து வாங்கினோம். சொட்டு நீர்ப் பாசன முறை அவசியம். இதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் செலவானது. கம்பிப் பந்தல் அமைக்க ரூ.1 லட்சம் செலவு செய்தோம். கிழங்கு முளைத்த ஒன்றரை மாதத்தில், அதன் கொடியை சணல் மூலம் கட்டி, பந்தலில் ஏற்றி விட வேண்டும்.