

கீரை அறுவடைப் பணியில் சித்ரா
காலையில் சூரியன் உதிக்கும் முன்பே வயலுக்குச் செல்வது, பயிர்களைப் பராமரிப்பது, அறுவடை செய்த கீரைகளை விற்பனைக்காக உழவர் சந்தைக்குக் கொண்டு செல்வது என நாள்தோறும் பரபரப்பாக இயங்கி வருகிறார் ராணிப்பேட்டையை அடுத்துள்ள வாலாஜா வட்டம், அனந்தலை கிராமம், பாரதிநகரைச் சேர்ந்த சித்ரா (41).
குடும்பப் பொறுப்புகளைச் சுமையாகப் பார்க்காமல், சுகமானதாகத் தனது தோள்களில் சுமந்தபடியே விவசாயத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார். கீரை சாகுபடியைத் தேர்ந்தெடுத்து, அதில் கிடைத்த அனுபவமும் வருமானமும் குறித்து அவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள், விவசாயத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்குப் பெரும் நம்பிக்கையூட்டுபவையாக உள்ளன.
ஒரு மாலைப் பொழுதில் அவரைக் காண நேரில் சென்றபோது, தனது வயலில் அறுவடைக்குத் தயாரான கீரை வகைகளை அறுத்து, மறுநாள் உழவர் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
அப்போது சித்ரா நம்மிடம் பேசுகையில், “திருமணமான புதிதில் எனக்கு விவசாயம் செய்யச் சுத்தமாகத் தெரியாது. என் கணவர் ஞானவேல் (48) எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.
எங்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்; அவர்கள் அனைவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். ஆரம்பத்தில் அவரோடு சேர்ந்து எங்கள் பூர்வீக நிலத்தில் (சுமார் 3 ஏக்கர்) நிலக்கடலை மற்றும் நெல் பயிரிட்டு வந்தோம். வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டே அவரிடமிருந்து விவசாயத்தையும் கற்றுக்கொண்டேன்.