

உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள தற்போதைய சூழலில், வளிமண்டலத்தில் அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவது அனைத்து நாடுகளின் முதன்மை இலக்காக மாறியுள்ளது. இந்தச் சூழலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டதுதான் கார்பன் கிரெடிட் திட்டம் ஆகும்.
ஒரு மெட்ரிக் டன் அளவிலான கார்பன் டை ஆக்சைடு அல்லது அதற்குச் சமமான பசுமைக்குடில் வாயுவை வளிமண்டலத்தில் இருந்து அகற்றுவது அல்லது அது வெளியிடப்படுவதைத் தடுப்பது ஒரு கார்பன் கிரெடிட் எனக் கணக்கிடப்படுகிறது.
தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தித் துறைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வெளியிடும் கார்பனைக் கட்டுப்படுத்தவும் ஈடுசெய்யவும் உதவும் நிதியியல் கருவியாக இது இயங்குகிறது.
விவசாயத் துறை என்பது வளிமண்டலத்தில் கார்பனை வெளியிடும் மூலமாக மட்டுமன்றி, வளிமண்டலக் கார்பனை உறிஞ்சிச் சேமித்து வைக்கும் பெரும் களஞ்சியமாகவும் திகழ்கிறது.
சூழலுக்கு உகந்த நீடித்த நிலையான விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் விவசாயிகள் பெருமளவில் கார்பன் டை ஆக்சைடை மண்ணில் சேமிக்க முடியும்.