

பன்னிரண்டு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த உலகில் மலர்ந்த புதுக்கற்காலப் புரட்சியின் வசந்த காலத்தில் தோன்றியதுதான் பயிர்த்தொழில். பயிர்த்தொழிலை கைக்கொண்ட மனிதன் மெல்ல மெல்ல வேட்டையாடுதலை நிறுத்திக்கொண்ட அதே வேளையில், நாகரிகம் கண்டான். அதனால் வளம் கண்ட மனிதன், பயிர்த்தொழிலின் அனைத்து பரிணாமத்தையும் உணர ஆரம்பித்தான்.
அத்தகைய உணர்வின் தொடக்கத்தில் முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகளில் பயிர்த்தொழில் தோன்றியது. அது, இன்று பாரெங்கும் கோலோச்சி வருகிறது. இப்படி பண்பட்ட பயிர்த்தொழிலை தன்வசப்படுத்திய மனிதனின் காலோட்டம் என்பது ஒரு நாளில் நிகழ்ந்தது அல்ல. அது மனிதனின் எண்ணவோட்டமாக எவ்வாறு மாறியது என்பதை ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் அவர்களின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி ஆராய்ந்து உள்ளனர்.
அதில் சமீபத்திய ஆய்வொன்றை வெளியிட்ட ஜெரு சலத்தின் ஹெப்றேவ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் அமோஸ் ப்ரும்கின், “வேட்டையாடுதலை விட்டுவிட்டு வேளாண்மை புரிய மனிதன் வந்ததற்கு முழுமுதற் காரணம் அப்போது நடந்த காலநிலை மாற்றமே” என்று கண்டறிந்துள்ளார்.
மேலும் அவர் இந்த ஆய்வை உறுதிபடுத்துவதற்காக ஏரிகளில் இருக்கும் கரிமண், குகைகளில் உருவான கார்பன் படிமங்கள், கடல் மட்டம் மற்றும் மண் தேக்க படிவங்கள் போன்றவற்றைச் சேகரித்து உறுதிபடுத்தி உள்ளார். “மனிதர்களின் ஆரம்ப கற்கால காலகட்டத்தில் மின்னல் அதிகரிப்பால் ஏற்பட்ட காட்டுத்தீயால் காடுகளில் இருக்கும் தாவர வளங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின.