

நெல் வயலில் தரணி முருகேசன்.
வறட்சி மாவட்டம், வானம் பார்த்த பூமி என்று அறியப்படும் ராமநாதபுரம் மண்ணில், இயற்கை வேளாண்மை மூலம் பொன் விளைவித்து வருகிறார் முன்னோடி விவசாயி தரணி முருகேசன்.
“விவசாயம் என்பது நஷ்டமான தொழில்” என்று கூறி இளைஞர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறும் இன்றைய சூழலில், ஒருங்கிணைந்த பண்ணைய முறையைக் கையாண்டு ஆண்டுக்கு ரூ. 3 கோடி விற்றுமுதல் ஈட்டி, பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
தரிசு நிலத்தை நந்தவனமாக்கிய விடாமுயற்சி
கடந்த 2011ஆம் ஆண்டு, சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டிப் போயிருந்த 40 ஏக்கர் நிலத்தை முருகேசன் வாங்கினார். ஒரு சொட்டு நீர் கூட இல்லாத அந்தப் பரப்பில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கூற்றுப்படி பணிகளைத் தொடங்கினார்.
நிலத்தைச் சீரமைத்து, உட்புறச் சாலை வசதிகளை ஏற்படுத்தியதோடு, மழைநீரைச் சேமிக்க 7 பிரம்மாண்ட குளங்களை வெட்டினார். முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, இன்று எட்டிவயல் மற்றும் புத்தேந்தல் கிராமங்களில் ஒரு மாதிரி இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியுள்ளார்.
இவரது பண்ணையை இயற்கை விவசாயி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டுப் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த பண்ணைய முறையின் பன்முகத்தன்மை
ஒரே ஒரு பயிரை மட்டும் நம்பி இருக்காமல், ‘ஒருங்கிணைந்த பண்ணைய முறை’யை முருகேசன் கையில் எடுத்துள்ளார். “என்னுடைய 40 ஏக்கர் பண்ணையில் 7 வகை கீரைகள் மற்றும் 12 வகை காய்கறிகள் அன்றாடம் விளைகின்றன.
புஞ்சை நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குதிரைவாலி, சாமை, சோளம், கம்பு போன்ற சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
மேலும் 20 ஏக்கர் பரப்பளவில் எள், நிலக்கடலை மற்றும் ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படுகின்றன. பணப்பயிர்களான பருத்தி, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவையும் இப்பண்ணையில் செழித்து வளர்கின்றன.
இந்த பன்முகத்தன்மை காரணமாக, ஒரு பயிரில் பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றொன்று கை கொடுத்து லாபத்தை உறுதி செய்கிறது” என்கிறார் முருகேசன்.