

படங்கள்: ஜெ.மனோகரன்
இன்றைய சூழலில் விவசாயமும் தொழிலும் தமிழர்களின் இரு கண்கள். காலங்காலமாக மண்ணை நம்பி வாழ்ந்த மூத்த உழவுக் குடிகளின் வாரிசுகள் இன்றைக்குப் பல்வேறு தொழில்களில் கோலோச்சினாலும், அவர்களின் அடிநாதமாக விளங்கும் விவசாயத்தையும் வாழ்வியலையும் பிரிக்க முடியாது.
இதனை கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 9 முதல் 13 வரை நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் - ஐந்து நாள் பெருவிழா தெள்ளத்தெளிவாக உணர்த்தியிருக்கிறது. விவசாயிகளுக்கு மட்டுமின்றிப் பொதுமக்களுக்கும் ஒரு பிரமாண்டமான திருவிழாவாக இது அமைந்தது.
இங்கு ரூ.5 மதிப்புள்ள விதைகள் முதல் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அதிநவீன இயந்திரங்கள் வரை, நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த வேளாண் சார்ந்த எண்ணற்ற கண்டுபிடிப்புகள் ஒரே கூரையின் கீழ் அணிவகுத்து நின்றன.
செல்போன் விரல் நுனியில்...
நாள்தோறும் அபரிமிதமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளைப் போலவே, இன்றைக்கு உழவுத் தொழிலும் அதன் தொழில்நுட்பமும் விஸ்வரூபம் எடுத்துள்ளதை இங்கு வந்தவர்கள் கண்கூடாகக் கண்டு வியந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி பஞ்சாப், லூதியானா போன்ற வட மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டிருந்த பிரமாண்ட ட்ரோன்களும், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீனக் கருவிகளும் உழவர்களின் கவனத்தை ஈர்த்தன.
குறிப்பாக, நீர் மேலாண்மைக்கு மகுடம் சூட்டும் வகையில் செல்போன் மூலமாகவே இயக்கிச் செயல்படுத்தப்படும் சொட்டுநீர்ப் பாசன முறை உழவர்களைப் பெரிதும் கவர்ந்தது.