

பரத்துரை சீலத்தவர் வாழ்வே பணித்தடி வாழ்வுற்றருள்வோனே
வரத்துறை நீதற்கொருசேயே வயித்திய நாதப் பெருமாளே! - திருப்புகழ்.
முருகனின் அழகும் திறமும் ஆற்றலும் எப்படிப்பட்டவை? அதை விளக்குவது மிகக் கடினமான ஒன்று. பேச முடியாத ஒருவர், தன் மனத்தில் உள்ளதை விளக்க முற்படுவது போலத்தான் இதுவும். அவன் கருணை இருந்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியம்.
‘உதியா மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா’
என்கிறது கந்தரனுபூதி. பக்தியால் மட்டுமே அறிய முடிந்த பரம்பொருள். முருகனால் முடியாதது ஒன்றுமில்லை. மரணத்தையும் எதிர்கொள்ளும் வலிமையைத் தருபவன் என்கிறது கந்தரலங்காரம்.
‘மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றவன்வந் தாலென்முன்னே,
தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்’ என்கிறார் அருணகிரியார்.
தல வரலாறு: காணும் இடமெல்லாம் தன் பக்தர்களைக் காக்க நிற்கும் கந்தன் அவர்களின் நோய் தீர்க்கவும் ஒரு தலத்தில் குடிகொண்டுள்ளான். அதுவே அனைவராலும் போற்றப்படும் வைத்தீஸ்வரன் கோயில். அருணகிரிநாதர் தரிசித்த 24ஆவது தலம். இது ‘புள்ளிருக்கும் வேளூர்’ என்று தேவாரத்தில் அழைக்கப்பட்டுள்ளது.
இங்கு முத்துக்குமார சுவாமி என்று முருகனுக்கு தனிச் சந்நிதி உள்ளது. ஆனால், தந்தையின் பெயராலேயே அருணகிரி நாதர் கந்தனையும் அழைக்கிறார். ஜடாயு, ரிக் வேதம், கந்தவேள் பூஜித்ததால் இப்பெயர். வேதபுரி, கந்தபுரி, அங்காரகபுரி என்று வேறு சில பெயர்களும் உண்டு.
தேவர்களைக் காக்க தாரகாசுரனுடன் முருகன் போர்புரிந்தபோது, காயமடைந்த தன் வீரர்களைக் காக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் தன் அன்னையையும் அப்பனையும் வணங்கித் துதிக்க, அவர்கள் வைத்தியநாதரும் தையல் நாயகியுமாக வந்து முருகனின் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். மருந்துகளால் குணமாக்க முடியாத நோய்களையும் தீர்க்கும் சிறந்த தலம் வைத்தீஸ்வரன் கோயில் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்புகழ் நாயகன்: இங்கு முருகனையே ஞானப் பொருளாகச் சிறப்பித்து ஆறு பாடல்கள் பாடியுள்ளார் அருணகிரிநாதர். ஞானப் பொருளாகிய உன்னை ஓதத் தெரியாது. மரக்கட்டையைப்போல் மும்மலம் எனும் ஆணவம், கன்மம், மாயையில் கிடந்து வீணாகலாமோ (‘மலத்திருள் மூடிக் கெடலாமோ’) என்று வினவும் நாதர், ‘உன் பாதம் பணிந்து வாழ்வு பெறுமாறு அருள்வாய்’ என்றுதான் கேட்கிறார்.
எத்தனை கோடிகோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன தளவேதோ
இப்படி மோக போகம் இப்படி யாகியாகி
யிப்படி யாவ தேது இனிமேலோ’
- பல பிறவிகள் எடுத்து, வீணே கழிந்து போனது. மீண்டும் இப்படியே பிறந்து அழிவதில் என்ன பயன்? இனிமேலும் இந்த மாய வாழ்க்கையில் சிக்காமல் உன் ஞானத் திருவடிகளைத் தந்தருள்வாய் என்கிறார்.
முத்தம் தரும் முத்துக்குமரன்
‘ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
நாய கிக்குநன் பாக ரக்கணியும்
நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் பெருமாளே’
என்னும் பாடலில், உமையைத் தன் இடப்பாகத்தில் கொண்டுள்ள ஈசன் மெச்சும்படி வந்து விளையாடி, அவருக்கு முத்தம் தந்தருளும் முருகப் பெருமான் என்கிறார். அதனாலேயே உனக்கு முத்துக்குமரன் எனும் பெயரோ என்று ஆசையுடன் குமரனைக் குழந்தையாகக் கொஞ்சுகிறார்.
அம்மையப்பனைப் போற்றும் அருணகிரிநாதர்: கடவுளைப் போற்றுவதில் பேதம் பார்ப்பதில்லை அருணகிரிநாதர். சிவமைந்தனே, அம்பிகை பாலனே, மாலோன் மருகனே என்றுதான் போற்றுகிறார். இங்கு ஈசனை வினை தீர்த்த சங்கரன் என்று துதிக்கிறார் ஒரு பாடலில்.
‘சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
மாதா ராபகல் காத்த மைந்தனை
சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ னெமையாளுந்
தூயாள்’ என்று அம்பிகையையும்,
‘.... மூவரை நாட்டு மெந்தையர்
வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்’ என்று ஈசனையும் பாடுகிறார்.
இந்த உடல் ஆசையினாலே உருவாகிறது. அந்த ஆசைகளை அகற்றி, இனி பிறவி எடுக்காமல் உன் வேலினால், வினைக் கூட்டங்களைத் தூளாக்க வேண்டும் என்பதை
‘மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து .... இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் .... கணமூடே’ என்கிறார் திருப்புகழில். அதிலேயே
‘மேவி யானு னைப்பொல் சிந்த யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து .... அருள்வாயே’ என்று விண்ணப்பம் செய்கிறார்.
காற்றைப் போல் எங்கும் பரவி நிற்கும் கந்தனை இத்திருப்புகழ் பாடி வணங்கினால், ஓடி வந்து நம் நோய் தீர்த்துக் காப்பான்.
(புகழ் ஓங்கும்)