Published : 30 Oct 2017 11:11 AM
Last Updated : 30 Oct 2017 11:11 AM

புதிய திரைவடிவம்

தொழில்நுட்பம் வளர வளர புதிய புதிய வடிவங்கள் தோன்றி கொண்டே இருக்கின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்கள் ரேடியோவில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு தொலைக்காட்சி வந்தது. ஒலியும் ஒளியும் பார்த்து ரசித்தோம். பிறகு இண்டர்நெட் சேவை வந்தது. இதனால் பாடல்களை உடனடியாக பார்க்கக்கூடிய வசதி ஏற்பட்டது. தற்போது வெளியாகிற படத்தை வீட்டிலிருந்தே பார்க்கக்கூடிய வசதி வந்துவிட்டது. அதிலும் நமக்கு எந்தவகையான படங்கள் பார்க்க விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. புதிய மீடியாக்கள் என்று சொல்லக்கூடிய யூடியூப், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் வீடியோ, போன்றவை நமது திரை அனுபவத்தை வேறு மாதிரியாக மாற்றிக் கொண்டேயிருக்கிறது. இந்த அனுபவம் இளைஞர்களுக்கு பிடித்திருக்கிறது. இந்த புதிய மீடியாவைப் பற்றி சில தகவல்கள்….

முக்கிய நிறுவனங்கள்

    நெட்பிளிக்ஸ்

    யூடியூப்

கூகுள் மூவி

ஹாட்ஸ்டார்

வுடு

சிலிங் டிவி

அமேசான் வீடியோ

ஹுலு பிளஸ்

----

நெட்பிளிக்ஸ்

    1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி ரீட் ஹேஸ்டிங்க்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ப் என்ற இருவரால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

    முதன்முதலாக திரைப்படம், பாடல்கள் அடங்கிய டிவிடி-களைத்தான் விற்பனை செய்து வந்தது நெட்பிளிக்ஸ் நிறுவனம். பிறகு டிவிடிகளை மெயில் மூலமாக அனுப்பும் திட்டத்தை கொண்டுவந்தது. இது வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது.

    2010-ம் ஆண்டு நிகழ்நேர (ஸ்ட்ரீமிங்) வடிவத்தை கொண்டு வந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆச்சரியப்படுத்தியது. இதன்மூலம் அப்போதே திரைப்படங்களை பார்க்கமுடிந்தது.

    2016-ம் ஆண்டின் படி நிறுவனத்தின் மொத்த வருமானம் 883 கோடி டாலர்

கிட்டத்தட்ட 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது சேவைகளை அளித்து வருகிறது.

மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3500

அமெரிக்காவில் மட்டும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு 4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

யூடியூப்

    பே பால் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜேவ்த் கரீம், ஸ்டீவ் சென், சாட் ஹுர்லே ஆகிய மூன்று பேர் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்காக புதிய சேனலை உருவாக்கினர்.

    ஆரம்பத்தில் இவர்கள் மூன்று பேர் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மட்டும் பகிர்ந்து சோதனை செய்து பார்த்தனர். இது வெற்றிகரமாக முடியவே உருவானது யூடியூப்.

    ஆனால் 2006-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் யூடியூப் நிறுவனத்தை 165 கோடி டாலர் தொகைக்கு விலைக்கு வாங்கியது.

    மொத்தம் 75 மொழிகளுக்கு மேல் இதில் பயன்படுத்தமுடியும்.

யூடியூப் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 700

குறைவான பணியாளர்களை கொண்டு அதிக வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனமாக யூடியூப் உள்ளது.

ஹாட்ஸ்டார்

    வீடியோ ஸ்ட்ரீம்ங்கில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக விளங்குவது ஹாட்ஸ்டார் நிறுவனம்

2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்தியா முழுவதும் 8 மொழிகளில் அனைத்து வடிவங்களிலும் திரைப்படங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தையும் பார்க்கமுடியும்.

மேலும் ஹாட்ஸ்டார் தற்போது தனது தயாரிப்பில் `வெப் சீரிஸ்’ எனும் இணையத் தொடர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் உலகப் கோப்பையின் போது கிரிக்கெட் போட்டிகளை ஹாட்ஸ்டார் மூலமாக 34 கோடி பேர் பார்த்துள்ளனர்.

இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 65 கோடி

அமேசான் வீடியோ

    இ-காமர்ஸ் முன்னணி நிறுவனமாக உள்ள அமேசான் நிறுவனமும் இந்தத் துறையில் குறிப்பிடும் படியான இடத்தை பிடித்து வருகிறது.

    2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி இந்தச் சேவை அமேசான் அன்பாக்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

2011-ம் ஆண்டிலிருந்து இண்டஸ்டண்ட் வீடியோ சேவையை தொடங்கியது. கிட்டத்தட்ட 5000 திரைப்படங்கள் இதில் பதிவேற்றப்பட்டன.

முதலில் அமெரிக்காவில் மட்டும் இந்தச் சேவை வழங்கப்பட்டு வந்தது. பின்பு இங்கிலாந்துக்கு 2014-ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.

இந்த சேவையை பெற உறுப்பினராவதற்கு அதிகபட்சம் 9 டாலர் வரை வசூலிக்கிறது அமேசான்.

> விவோ என்ற நிறுவனம் மியூசிக் சேவைகளை மட்டும் ஸ்ட்ரீமிங் முறையில் வழங்கி வருகிறது.

> கணினி விளையாட்டுகள் மட்டுமே கொண்ட ஸ்ட்ரீமிங் விளையாட்டு தளம் டிவிட்ச்

> தமிழில் தற்போது நிறைய யூடியூப் சேனல்கள வரத் தொடங்கிவிட்டன. மெட்ராஸ் சென்ட்ரல், புட் சட்னி, ஸ்மைல் சேட்டை, ஃபுல்லி பிளிமி போன்ற யூடியூப் சேனல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

> தமிழ் திரைப்பட இயக்குநர் பாலாஜி மோகன் ஹாட்ஸ்டாரில் `அஸ் ஐஎம் சப்பரிங்க் ப்ரம் காதல்’ என்ற வெப் சீரிஸ் தொடரை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x