Published : 16 Oct 2017 10:33 AM
Last Updated : 16 Oct 2017 10:33 AM

`நானோ ஒரு பிரச்சினையல்ல’

2008

-ம் ஆண்டு நானோ கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலே அந்த எதிர்பார்ப்பு பொய்த்து போனது. ஒரு லட்ச ரூபாய்க்கு கார் விற்கப்பட வேண்டும் என்பது ரத்தன் டாடாவின் கனவு. அந்த கனவின் தோல்விக்கு பிறகு, டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் டாடா சன்ஸ் தலைவர்களுக்கு நானோ எப்போதும் தலைக்கு மேல் தொங்கும் கத்திதான். ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் என்பதாலேயே டாடா நானோ உற்பத்தி செய்யப்படுகிறது என சைரஸ் மிஸ்திரி வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் சில நாட்களுக்கு முன்பு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல் முறையாக பேட்டி அளித்தார்.

அப்போது டாடா குழுமத்தை பற்றி பல கேள்விகள் இருந்தாலும், நானோ பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த சந்திரசேகரன், எந்த காரணமும் இல்லாமல் நானோ கார் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நானோ பற்றிய பொதுவெளியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பல மாடல் கார்கள் உள்ளன. இதில் இண்டிகா மாடல் காரினை தவிர மற்ற அனைத்து மாடல் கார்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன. கார்கள் பிரிவின் ஒட்டுமொத்த நஷ்டத்தில் நானோவின் பங்கு 4 சதவீதம் மட்டுமே. அதனால் நானோ கார் உற்பத்தியை நிறுத்தினாலோ, அல்லது அதனை லாப பாதைக்கு திருப்பினாலோ பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்காது. டாடா மோட்டார்ஸில் நானோவை தவிர்த்து மேற்கொள்ளவேண்டிய பல பணிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாடல் காரினையும் லாபமீட்டுவதற்கு செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. டாடா மோட்டார்ஸை பொறுத்தவரை நானோ என்பது பில்லியன் டாலர் கேள்வி அல்ல.

நாட்டில் விற்பனையாகும் 10-ல் ஒரு கார் மட்டுமே டாடா மோட்டார் காராக இருக்கிறது. இதனை எப்படி உயர்த்துவது என்பது மட்டுமே எங்களின் இலக்கு என தொலைக்காட்சி பேட்டியில் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நானோவுக்கு இன்னமும் வாழ்வு இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x