Published : 04 Oct 2017 10:40 am

Updated : 04 Oct 2017 10:41 am

 

Published : 04 Oct 2017 10:40 AM
Last Updated : 04 Oct 2017 10:41 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: விலங்குகளுக்குப் படிக்கத் தெரிந்தால் என்னாகும்?

ம்மிடம் பணம் இருந்தால் அதைச் செலவழிக்க நமக்கு ஆயிரத்தெட்டு வழிகள் தெரியும். நருடோ ஒரு குரங்கு. அதன் கையில் பணத்தைக் கொடுத்தால் என்ன செய்யும்? தன்னிடம் கொடுக்கப்பட்டது பணம் என்பதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறதா? அந்தப் பணத்தின் மதிப்பு என்ன என்று அதற்குத் தெரியுமா? அதிலுள்ள எண்களைப் படித்து இதை வைத்து என்னவெல்லாம் வாங்கமுடியும் என்று கணக்கிடத் தெரியுமா? ஒரு சாக்லேட் கொடுங்கள் என்று கடைக்காரரிடம் பணத்தை நீட்டி, பாக்கி சில்லறையை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் சாமர்த்தியம் அதற்கு இருக்கிறதா?


நருடோவுக்குப் பணம் என்பது ஒரு காகிதத் துண்டு. நீங்கள் எத்தனை பெரிய தொகை கொடுத்தாலும் அதை ஊதித் தள்ளிவிடும். அல்லது முகர்ந்து பார்த்துவிட்டு வாயில் போட்டு மென்று தின்றுவிடும். அல்லது இரு கைகளிலும் பிடித்து கிழித்துவிடக்கூடும். பணம் உருவாக்கப்பட்டது மனிதர்களுக்காக. நான் மனிதன். பணத்தை எனக்குக் கொடுங்கள், குரங்குக்கு அல்ல. இதுதான் டேவிட் ஸ்லேட்டர் இரண்டு ஆண்டுகளாக வைத்துவரும் வாதம்.

பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞரான டேவிட் ஸ்லேட்டருக்கும் இந்தோனேஷியாவில் செல்ஃபி எடுத்துக்கொண்ட நருடோ என்னும் கறுப்பு நிற மகாக் குரங்குக்கும் இடையிலான வழக்கு பற்றி நாம் ஏற்கெனவே இங்கே பார்த்தோம். புகைப்படம் எடுத்த கேமரா எனக்குச் சொந்தம் என்பதால் அதன்மூலம் கிடைக்கும் பணமும் எனக்குதான் சொந்தம் என்கிறார் ஸ்லேட்டர்.

நருடோ என்று நீங்கள் பெயர் வைத்திருக்கும் குரங்கு எதைப் பற்றியும் கவலையில்லாமல் உல்லாசமாகக் காட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறது. படம் எடுத்த நான்தான் ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கிறேன். என் கேமரா உடைந்துவிட்டது. இன்னொன்று வாங்குவதற்குக்கூட கையில் பணமில்லை. என் ஏழு வயது மகளை வைத்துக்கொண்டு ரொம்பவும் திண்டாடிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் வழக்கு, விசாரணை என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பது அநியாயம் இல்லையா? என்னுடைய படத்தை இதுவரை பயன்படுத்திய ஒவ்வொருவரும் ஒரு பைசா கொடுத்தாலும் இந்நேரம் நான் கோடீஸ்வரன் ஆகியிருப்பேனே!

இப்படியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்த ஸ்லேட்டர் இனி நிம்மதியடையலாம். 2015-ம் ஆண்டு தொடங்கிய வழக்கு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் சண்டை போடாமல் படத்தின் உரிமையையும் அதன்மூலம் கிடைக்கும் பணத்தையும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்று முடிவாகிவிட்டது. ஸ்லேட்டருக்கு அதிக பங்கு, 75%. நருடோவுக்கு 25%. ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று ஸ்லேட்டரும் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார். இனி நருடோ படத்தை யார், எப்போது பயன்படுத்தினாலும் அதற்கான கட்டணத்தை ஸ்லேட்டருக்குத் தந்துவிடவேண்டும். அவர் அதை நருடோவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

ஆனால் நருடோ இப்போது எங்கே இருக்கிறது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? ஸ்லேட்டருக்குப் பிறகு படத்துக்கான கட்டணத்தை அவர் மகள் பெற்றுக்கொள்வார். அதேபோல் நருடோவுக்குப் பிறகு நருடோவின் குட்டி கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளுமா? அந்தக் குட்டியை எப்படிக் கண்டுபிடிப்பது?

இதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்திருக்கிறார்கள். 25% பணத்தை எடுத்து நருடோவுக்குக் கொடுக்கவேண்டியதில்லை, நருடோ போன்ற மகாக் இன குரங்குகளின் நலன்களுக்காக இந்தத் தொகை செலவிடப்படும். காரணம் இந்த வகை குரங்கு அழிவின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. நான் எடுத்த படமும் அந்தப் படம் மூலம் கிடைக்கும் வருமானமும் ஒரு குரங்கு இனத்தைக் காக்க உதவும் என்றால் எனக்கு அதில் மகிழ்ச்சிதான் என்கிறார் ஸ்லேட்டர்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். விலங்குகளுக்கு ஒருவேளை படிக்கத் தெரிந்து, இந்த வழக்கு பற்றி அவை தெரிந்துகொண்டால் என்னாகும்? எனக்கு எவ்வளவு பங்கு என்று சொன்னால்தான் பால் தருவேன் என்று பசுமாடு முறைக்கும். கம்பளியெல்லாம் இனி தர மாட்டேன், முதலில் இதுவரை எடுத்துக்கொண்ட கம்பளிக்கு ஒழுங்காகப் பணம் கொடு என்று ஆடு பட்டியல் போட்டு கேள்வி கேட்கும். என்னது, தேன் வேண்டுமா? முதலில் என் வக்கீலைப் பார் என்று சொல்லிவிட்டு தேனீ பறந்து சென்றுவிடும்.

குதிரை மட்டும் சும்மா இருக்குமா? என் மீது ஏறி உட்கார்ந்து ஒய்யாரமாகச் சவாரி செய்கிறாயே, என் அனுமதியை நீ வாங்கினாயா என்று அது நம்மைப் பார்த்து கேட்கும். என்னைக் கூண்டில் அடைத்து கொடுமைப் படுத்தியதற்காக உன் மீது வழக்கு தொடுக்கிறேன், பார் என்று பச்சைக் கிளி, மூக்கு சிவக்கச் சண்டை போடும். என்னை இப்படித்தான் வளர்ப்பதா என்று நாயும் பூனையும்கூட கேள்வி கேட்கும். பத்திரமாக நடந்துபோ, என்னை மிதித்தால் நீ சிறைக்குதான் போகவேண்டும் என்று எறும்பு சட்டம் பேசும். நிஜமாகவே இந்த விலங்குகள் எல்லாம் நருடோபோல் நம்மீது வழக்கு போட்டால் என்னாகும்?

இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. எறும்பு முதல் யானை வரை; எலி முதல் புலி வரை; பூச்சி முதல் பறவை வரை எல்லா உயிர்களையும் நேசிப்போம். ஒரு மண் புழுவையோ சுண்டெலியையோ பட்டாம்பூச்சியையோ சந்திக்க நேர்ந்தாலும், வணக்கம் என்று அன்போடு சொல்லிப் பாருங்கள். அதுவும் அதன் மொழியில் வணக்கம் சொல்லும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

tamil-and-me

தமிழும் நானும்

இணைப்பிதழ்கள்
x